காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள 328 பொது கழிப்பறைகளில், 296 கழிப்பறைகள் மோசமடைந்த நிலையில் உள்ளன.இதில் 54 சுகாதார கழிப்பறைகள் பழுது நீக்கலாம். மேலும், 56 சுகாதார கழிப்பறைகளை முற்றிலும் இடித்து அகற்றலாம் என, பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக 80 சுகாதார கழிப்பறை கட்டடங்கள், குளம், குட்டை மற்றும் கால்வாய் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ளன. இது, ஊரக வளர்ச்சி துறையினர் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.மத்திய அரசின் புதிய அறிவிப்புபடி, நீர்நிலை புறம்போக்கில் அரசு கட்டடம் கட்டியிருந்தால் அவற்றை சீரமைக்க அனுமதி வழங்குவதில்லை என குறிப்பிட்டுள்ளது.தற்போது, ஊராட்சிகளில் புதிய கட்டடம் கட்ட வேண்டும் எனில், கட்டுவதற்கு முன்பு, அட்ச ரேகை மற்றும் தீர்க ரேகையின் எண்களுடன்கூடிய ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும். கட்டும் போதும், அதே போல் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும்.இந்த பதிவு அறிக்கையில், நிலங்களின் வகைப்பாடுகளை குறிப்பிட வேண்டும். இதில் நீர்நிலை புறம்போக்கு என இருந்தால், அனுமதி வழங்கப்படுவதில்லை.இதனால், 80 சுகாதார கழிப்பறைகளை சீரமைக்க தலா 3 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும், உரிய அனுமதி கிடைக்காததால், அக்கழிப்பறைகளை சீரமைப்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஊராட்சி நிர்வாகங்கள், மகளிர் மற்றும் ஆண்கள் கழிப்பறைகளை, ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு நிலத்தில் கட்டியுள்ளனர்.பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய அக்கட்டடங்கள், தற்போது மோசமான நிலையில் உள்ளன. இவை உட்பட பல பொது கழிப்பறைகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு பெற்றோம். ஆனால், நில வகைபாடு மாற்றம் காரணமாக, பிரச்னைக்குரிய 80 கழிப்பறைகளுக்கு நிதி பெற்றும், சீரமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், அந்த பகுதிகளில் மாற்று இடம் தேர்வு செய்து, சுகாதார கழிப்பறைகளை கட்ட உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.