| ADDED : மே 20, 2024 04:09 AM
காஞ்சிபுரம், : தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழகம் சார்பில், பணி நிறைவு பெறும், மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா காஞ்சிபுரத்தில் நடந்தது.தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழக மாவட்ட தலைவர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். மண்டல மகளிர் அணி செயலர் கோமதி, மண்டல செயலர் சுப்பிரமணி, மேற்கு மாவட்ட தலைவர் ஆனந்தகுமார் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் தங்கமணி, மாநில சட்ட செயலர் சீனிவாசன் சிறப்புரையாற்றினர்.இதில், படப்பை, சிங்காடிவாக்கம், மதுரமங்கலம், காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி., மாத்துார், தாமல், தென்னேரி, அய்யங்கார்குளம், களியாம்பூண்டி, கம்மாள்பூண்டி உள்ளிட்ட மேல்நிலைப் பள்ளிகளின் பணி நிறைவு பெறும் தலைமை ஆசிரியர்கள் ஏற்புரை நிகழ்த்தினர். மாவட்ட செயலர் பொய்யாமொழி வரவேற்றார். மாவட்ட பொருளாளர் சங்கர் நன்றி கூறினார்.தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு அனைத்து பண பயன்களையும் ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்ற பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டிருந்தும், இதுநாள் வரை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு தடையின்மை சான்று வழங்கப்படவில்லை.இதனால், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் பண பலன்கள் பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதில் உடனே அரசு தலையிட்டு, பண பலன்களை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.