சென்னை : சென்னை மின்தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கூடுதலாக, 800 மெகாவாட் மின்சாரத்தைக் கையாள, கோயம்பேடில் தலா, 500 எம்.வி.ஏ., திறனில் இரு பவர் டிரான்ஸ்பார்மர்களுடன் கூடிய துணைமின் நிலையம் அமைக்க, மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில், சென்னையில் தான் குடியிருப்புகளும், தொழில் நிறுவனங்களும் அதிகம் செயல்படுகின்றன. அதற்கு ஏற்ப, மின் பயன்பாடும் அதிகம் உள்ளது. திட்டம் ஒத்திவைப்பு
தினமும் சராசரியாக, 7 கோடி யூனிட்களாக உள்ள சென்னை மின் நுகர்வு கடந்த மே, 31ல், 10.17 கோடி யூனிட் என்ற உச்சத்தை எட்டியது. இது, வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும்.குறிப்பாக, அண்ணா நகர், அம்பத்துார், மதுரவாயல், மாங்காடு, பூந்தமல்லி போன்ற பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மேற்கு பகுதிகளில், மின்தேவை அதிகரித்து வருகிறது.எனவே, கோயம்பேடு, 230 கி.வோ., துணைமின் நிலையம் அருகில், 400 கி.வோ., திறனில் துணைமின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.அங்கு, 500 எம்.வி.ஏ., எனப்படும், 'மெகா வோல்ட் ஆம்பியர்' திறனில் இரு பவர் டிரான்ஸ்பார்மர்கள் நிறுவப்பட உள்ளன. இதனால் கூடுதலாக, 800 மெகாவாட் மின்சாரம் கையாள முடியும்.இதுகுறித்து, மின் தொடரமைப்பு கழக உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:கோயம்பேடில், 400 கி.வோ., துணைமின் நிலையம் அமைக்க, சில ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டது. நிதி நிலைமை சரியில்லாத காரணத்தால், அத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. கூடுதல் மின்சாரம்
மின்தேவை, மதிப்பீட்டைவிட அதிகரித்து வருகிறது. கூடுதல் மின்சாரம் கையாள கோயம்பேடில், 500 எம்.வி.ஏ., திறனில் இரு பவர் டிரான்ஸ்பார்மர் உடன், துணைமின் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இது, கொரட்டூர், 400 கி.வோ., துணைமின் நிலையத்துடன் இணைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.திருவள்ளூரில் உள்ள வடசென்னை, வல்லுார் அனல்மின் நிலையங்களின் மின்சாரம் அலமாதி - காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம் வழித்தடத்தில் எடுத்துச் செல்லப்படுகிறது.அலமாதியில் இருந்து கொரட்டூர் துணைமின் நிலையத்திற்கு மின்சாரம் வருகிறது.எனவே, கொரட்டூரில் இருந்து கோயம்பேடிற்கு கூடுதல் மின்சாரம் எடுத்து வந்து, பல பகுதிகளுக்கு வினியோகம் செய்ய முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.