சென்னை : புதிய மினி பஸ் திட்டத்தை ஆம்னி பஸ் உரிமையாளர்கள், வியாபாரிகள் வரவேற்றுள்ளனர். 'சென்னை புறநகர்களில் சிற்றுந்து வசதியால் விரிவாக்கப்பகுதிகள் வளர்ச்சி பெறும்; சாமனியர்களுக்கு போக்குவரத்து வசதியும் கிடைக்கும்' என, கருத்துக் கேட்பு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.சென்னையை தவிர, பிற மாவட்டங்களில் நகரம் மற்றும் கிராமங்களை இணைக்கும் வகையில், 2,950 தனியார் மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மினி பஸ்கள் எனப்படும் சிற்றுந்துகளுக்கு தேவை அதிகரித்து வரும் நிலையில், சேவையை விரிவுப்படுத்த வேண்டும் என்றும், சென்னையிலும் தனியார் சிற்றுந்துகளை அனுமதிக்க வேண்டும் என்றும், பயணியர் மற்றும் மினி பஸ் உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.இதற்கிடையே, மினி பஸ் புதிய வரைவு திட்டம் குறித்து, தமிழக அரசிதழில் கடந்த மாதம் 14ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதில், பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, தற்போதைய நிலவரப்படி, நகர்ப்புறங்கள் அல்லாத பகுதிகளில் 20 கி.மீ., வரை சிற்றுந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிதாக கொண்டுவரப்பட்ட திட்டத்தின்படி, 25 கி.மீ., வரை சிற்றுந்துகள் இயக்கலாம். அதில், 30 சதவீதம் ஏற்கனவே உள்ள வழித்தடங்களில் செல்லலாம். எஞ்சியவற்றை புதிய வழித்தடத்தில் இயக்க வேண்டும்.இதுவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தனியார் சிற்றுந்துகள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது, புதிய வரைவு திட்டத்தின் படி, சென்னை புறநகர் பகுதிகளான திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்துார், வளசரவாக்கம், ஆலந்துார், பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்களில் சிற்றுந்துகள் இயக்குவது குறித்து பரிசீலனை செய்யலாம் என புதிய திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.'மினி பஸ் வரைவு திட்டம்' குறித்து சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. இதில், உள்துறை செயலர் தீரஜ்குமார், போக்குவரத்து ஆணையர் எஸ்.ஜே., சிரு, அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், குடியிருப்போர் நல சங்கங்கள், தமிழ்நாடு மினி பஸ் உரிமையாளர்கள், அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம், திருவல்லிக்கேணி வியாபாரிகள் நல சங்க நிர்வாகிகள் வரவேற்று பேசினர். சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் பங்கேற்று, சிற்றுந்து வரைவு திடத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:கொடியரசன், தலைவர், தமிழ்நாடு மினி பஸ் உரிமையாளர்கள் சங்கம்: குக்கிராமங்களுக்கும் இணைப்பு வசதி தரும், சிற்றுந்து வசதியை விரிவுப்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட உள்ள திட்டத்தை வரவேற்கிறோம். இருப்பினும், ஏற்கனவே உள்ள சிற்றுந்து உரிமையாளர்களின் பிரச்னையை தீர்க்க வேண்டும். டீசல் விலை, உதிரி பொருட்கள் விலை உயர்வால், பெரும் நஷ்டத்தில் சிற்றுந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு தற்போது அனுமதி அளித்துள்ள வழித்தட துாரத்தை அதிகரிக்க வேண்டும். அதுபோல், சென்னையில் தனியார் சிற்றுந்து இயக்கும் திட்டம் வரவேற்க கூடியது. அனுமதி வழங்கப்பட உள்ள சென்னையின் எட்டு மண்டலங்களிலும், அருகில் உள்ள முக்கிய பேருந்து, ரயில் நிலையங்களையும் இணைக்கும் வகையில், சிற்றுந்துகளை அனுமதிக்க வேண்டும். அப்போது தான், பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும்.வி.பி.மணி, தலைவர், திருவல்லிக்கேணி வியாபாரிகள் நல சங்கம்: விமான நிலையத்தில் இருந்து அரசினர் தோட்டத்துக்கு மெட்ரோ ரயிலில் 40 ரூபாயில் வந்து விடுகிறோம். ஆனால், அங்கிருந்து வீட்டுக்கு ஆட்டோவில் பயணிக்க 100 ரூபாய் ஆகிவிடுகிறது. எனவே, பயணியர் இணைப்பு வசதி பெற, சிற்றுந்து திட்டம் அவசியமானது. சுப்பிரமணியன், பொது செயலர், பெரம்பூர் திருவள்ளூர் நகர் குடியிருப்போர் நல சங்கம்: எங்கள் பகுதியில் இருந்து பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகியவை 2 கி.மீ., துாரத்தில் உள்ளன. ஆட்டோவில் செல்ல 100 ரூபாய்க்கு மேல் கேட்கின்றனர். குடியிருப்பு பகுதிகளில் இருந்து சாதாரண மக்கள், முதியோர் செல்ல, சென்னையில் சிற்றுந்து திட்டம் வரவேற்க கூடியது. இதற்காக, நாங்கள் பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.அப்போது, கூட்டத்தில் பங்கேற்ற சிலர் குறுக்கிட்டு, ''மினி பஸ்திட்டத்தை மட்டும் பேசுங்கள்'' என, கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ''மினி பஸ் வரைவு திட்டம் குறித்து நிறை, குறைகளை எடுத்துரைத்த கருத்துகளை முழுவதும் ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, உள்துறை செயலர் தீரஜ்குமார் கூறினார்.தேசிய அளவில் மாநகரங்களில், அரசு பேருந்துகள் தான் இயக்கப்படுகின்றன. சென்னையில் தனியார் பேருந்து இயக்கும் வகையில், திட்டத்தை மறுபரிசீலனை செய்யக் கோரி ஏற்கனவே கடிதம் அளித்துள்ளோம். சென்னையில் எட்டு மண்டலங்களில் 1,700 மாநகர பேருந்துகள், 17,000 நடைகளாக இயக்கி வருகிறோம். அதுபோல், சிற்றுந்துகளுக்கு 25 கி.மீ., அனுமதி என்பது அதிக துாரம்; இதை 8 கி.மீ., ஆக குறைக்க வேண்டும். ஆல்பி ஜான் வர்கீஸ் எம்.டி.சி., நிர்வாக இயக்குனர்புதிய மினி பஸ் வரைவு திட்டத்தில், 25 கி.மீ., துாரம் அனுமதிப்பது, அரசு நகர பேருந்து இயக்கத்தை பாதிக்கும். நகர பேருந்து இயக்கத்தில் 8 கி.மீ., துாரத்தில் நான்கு ஸ்டேஜ் வருகிறது. 60 சதவீத பயணியரும் இந்த இடைவெளியில் தான் பயணிக்கின்றனர். சிற்றுந்துகள் இயக்குவதில் விதிமீறல் அதிகமாக இருப்பதால், கண்காணிப்பு முறையை கடுமையாக்க வேண்டும்.பொன்முடி, நிர்வாக இயக்குனர், சேலம் அரசு போக்குவரத்து கழகம்