காஞ்சிபுரம்: கோடை விடுமுறைக்குப் பின் தமிழகத்தில் நாளை அரசு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு துவக்கம், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் நாளை திறக்கப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவின்படி, பள்ளி வளாகம், வகுப்பறை, கழிப்பறை, ஆய்வகம் உள்ளிட்ட பகுதிகள் துாய்மைப்படுத்தப்பட்டு வருகிறது.மேலும், காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவ- - மாணவியருக்கு தேவையான நோட்டு புத்தகம், பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், வாட்டர் பாட்டில், உள்ளிட்டவை விற்பனை செய்யும், 'ஸ்டேஷனரி' கடைகளிலும், ஸ்கூல் பேக் விற்பனை செய்யும் கடைகளிலும் நேற்று விற்பனை களை கட்டியது.புதிதாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்லும் மாணவ- - மாணவியர் தங்களுக்கு தேவையான, 'ஸ்டேஷனரி' பொருட்களை வாங்கிச் சென்றனர்.இதுகுறித்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 'ஸ்டேஷனரி' பொருட்கள் விற்பனை செய்யும் கடை உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:ஆண்டுதோறும் ஸ்டேஷனரி பொருட்களில், நோட்டு புத்தகம் மட்டும் விலை வழக்கமாக உயரும். ஆனால், நடப்பாண்டு, 10 - 15 சதவீதம் வரை விலை குறைந்துள்ளது. மற்றபடி கைடு விலை உயரவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.