காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் மக்கள் மருந்தகம் விரைவில் திறப்பு
காஞ்சிபுரம்:மத்திய அரசின் மருந்தியல் அமைச்சகம் சார்பில், அனைவருக்கும் மலிவு விலையில் பொது மருந்துகள் கிடைக்க, குறைந்த லாபத்தில் விற்பனை செய்யப்படும் ஜெனரிக் மருந்தகத்தை நாடு முழுதும், பிரதான் மந்திரி பாரதிய ஜனவுஷதி பரியோஜனா எனப்படும், 'பிரதமரின் மக்கள் மருந்தகம்' முக்கிய ரயில் நிலையங்களில் திறக்கப்பட்டு வருகிறது.அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், அதிகளவு பயணியர் வந்து செல்லும் காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில், 'பிரதமரின் மக்கள் மருந்தகம்' அமைக்க, மத்திய அரசின் மருந்தியல் அமைச்சகம் முடிவு செய்தது அதன்படி, புதிய ரயில் நிலையத்தில் மருந்தகம் கட்டுமானப் பணி, 10 நாட்களுக்கு முன் நிறைவு பெற்றது.இதுகுறித்து ரயில் நிலைய அலுவலர் ஒருவர் கூறுகையில், 'காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில், 'பிரதமரின் மக்கள் மருந்தகம்' அமைக்கப்பட்டுள்ளது. மருந்தகம் திறப்பது தொடர்பாக டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் மருந்தகம் திறக்கப்பட்டு, பொதுமக்களுக்கு பயன்படும் வகையில், பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்' என்றார்.