காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் ரூ.3 கோடியில் திருப்பணிகள் தீவிரம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற வரதராஜ பெருமாள் கோவில், 108 திவ்யதேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. பல்வேறு சிறப்பு பெற்ற இக்கோவில், 2,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இக்கோவிலுக்கு கிருஷ்ணதேவராயர், பராந்தக சோழன், பல்லவ மன்னர்கள் உள்ளிட்டோர் திருப்பணி செய்துள்ளனர். பல்வேறு சிறப்பு பெற்ற இக்கோவிலில் 2012ம் ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகள் ஆன நிலையில், இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.இதையடுத்து, தமிழக அரசின், 2023- -24ல் சட்டசபை அறிவிப்பின்படி, வரதராஜ பெருமாள் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்து கும்பாபிேஷகம் நடத்த ஹிந்து சமய அறநிலையத்துறையினர் முடிவு செய்தனர்.அதன்படி, முதற்கட்டமாக கிழக்கு மற்றும் மேற்கு ராஜ கோபுரம், உடையவர் சன்னிதி, பெரியாழ்வார் சன்னிதியில் திருப்பணியை துவக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி, கோவிலில் பாலாலயம் நடந்தது. தொடர்ந்து திருப்பணி துவக்கப்பட்டுள்ளது.அதன்படி, சோழ பேரரசு காலத்தில், கருங்கல்லால் ஆன கலக்கரத்தில், சுண்ணாம்பு மற்றும் செங்கல் கலவை வாயிலாக கட்டப்பட்ட 125 அடி உயரமும், 99 அடி அகலமும், 11 நிலை கொண்ட கிழக்கு ராஜகோபுரம், 72.50 லட்சம் ரூபாய் மதிப்பில், பழுது பார்த்து புதுப்பிக்கும் பணி.விஜயநகர பேரரசு காலத்தில், கல்காரம் கிரானைட் கல் மற்றும் சுண்ணாம்பால் கட்டப்பட்ட 96 அடி உயரமும், 92.5 அடி அகலமும், 7 நிலை கொண்ட மேற்கு ராஜகோபுரம், 1 கோடியே 25 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், பழுது பார்த்து, புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.உடையவர் சன்னிதி 11 லட்சம் ரூபாய் மதிப்பில், பழுது பார்த்து புதுப்பிக்கும் பணியும், பெரியாழ்வார் சன்னிதி பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி 99.90 லட்சம் ரூபாய் மதிப்பீடு என, மொத்தம் 3.09 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணி நடந்து வருகிறது என, வரதராஜ பெருமாள் கோவில் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதவிர, வைகாசி பிரம்மோத்சவத்தின் போது, வரதராஜ பெருமாள் பவனி வரும் மரத்தேர், உபயதாரர் நிதி வாயிலாக 4.95 லட்சம் ரூபாய் மதிப்பில் பழுது பார்த்தல் பணி நடந்து வருகிறது.