உத்திரமேரூரில் ஆர்.டி.ஓ., அலுவலகம் அமைக்க பகுதியினர் கோரிக்கை
உத்திரமேரூர்:உத்திரமேரூர் தாலுகாவில் 73 வருவாய் கிராமங்கள் உள்ளன. இங்கு, 10 லட்சத்திற்கும் மேல் இரு சக்கரம், நான்கு சக்கரம், கனரக வாகனங்கள் உள்ளன.உத்திரமேரூர் தாலுகாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து, தினமும் 100க்கும் மேற்பட்டோர் புதிய வாகனம் பதிவு செய்தல், ஓட்டுனர் உரிமம், தடையில்லா சான்று, கனரக வாகன உரிமம் ஆகியவை பெற, 40 கிலோ மீட்டர் தூரமுள்ள காஞ்சிபுரம் அடுத்த, பொன்னேரிக்கரை அலுவலகத்திற்கு சென்று வருகின்றனர்.இதனால், அவர்களுக்கு காலம் மற்றும் பண விரயம் ஏற்பட்டு வருகிறது. அதே நேரத்தில், நீண்ட தூரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளதால், அவ்வப்போது உத்திரமேரூர் தாலுகாவில் நடக்கும் போக்குவரத்து விதிமீறல்களை, வட்டார போக்குவரத்து அலுவலரால் கண்காணிக்க முடியாத நிலையும் உள்ளது.மேலும், உத்திரமேரூர் மக்கள், காஞ்சிபுரம் அலுவலகத்திற்கு செல்லும்போது, அடிக்கடி சாலை விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.எனவே, உத்திரமேரூரில் வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகம் அமைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.