| ADDED : மே 16, 2024 11:58 PM
சென்னை:சேப்பாக்கம், ஓமந்துாரார் வளாகத்தில் நான்கு 'பிளாக்'குகளில், எம்.எல்.ஏ.,க்களுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது.இந்த விடுதியை பராமரிக்க, 15க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பணியில் உள்ளனர்.நேற்று முன்தினம் அதிகாலை, சேப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த துாய்மை பணியாளர் ஆரோக்கிய மேரி,51, என்பவர், எம்.எல்.ஏ., விடுதியில், 'சி பிளாக்'கில் பணியில் இருந்தார்.அப்போது, மனிதநேய மக்கள் கட்சியின் மணப்பாறை தொகுதி எம்.எல்.ஏ., அப்துல் சமதின் உதவியாளர் அபு என்பவரின் கார், வேகமாக வந்து ஆரோக்கியமேரி மீது மோதியுள்ளது.இதில் அவர் பலத்த காயமடைந்து, ஆபத்தான நிலையில் ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.எம்.எல்.ஏ.,வின் உதவியாளர் அபு மீது நடவடிக்கை எடுக்க கோரி, திருவல்லிக்கேணி போலீசில் ஆரோக்கியமேரியின் உறவினர்கள் புகார் அளித்தனர்.புகாரை வாங்க போலீசார் மறுத்ததாக தெரிகிறது. பின், இரவு நேரத்தில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால், போலீசார் புகாரை பெற்று, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.