கும்மிடிப்பூண்டி : திருவள்ளூர் மாடட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் தனியார் நச்சு கழிவு மேலாண்மை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், சுற்றியுள்ள கிராம பகுதியினர் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.இந்நிலையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், தீ விபத்து குறித்து விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. பாதுகாப்பு உறுதி செய்தபின்னரே மீண்டும் இயக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது.கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், 60 ஏக்கர் பரப்பளவில், 'ரீ சஸ்டெயினபிலிட்டி ஐ.டபில்யூ.எம்.,சொலியூஷன்' என்ற பெயரில் நச்சு கழிவு மேலாண்மை நிலையம் இயங்கி வருகிறது.அங்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து, கொண்டு வரப்படும் நச்சு கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. நச்சு கழிவுகளின் தன்மைக்கு ஏற்ப, செயலிழக்கம் செய்யப்படுகிறது.நேற்று முன்தினம் மதியம் அங்கு ஒரு பகுதியில் குவிக்கப்பட்டிருந்த கழிவுகளில் தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீ, கட்டுக்கு அடங்காமல் வானுயர கரும்புகை எழும்பியது.அந்த நச்சு கழிவுகளின் கரும்புகை, சுற்றியுள்ள கிராம பகுதிகளை சூழ்ந்துக் கொண்டது.அதிலிருந்து வீசிய நெடியால், கிராம மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அச்சம் அடைந்த பலர் கிராமத்தை விட்டு வெளியேறி, கரும்புகை அடங்கியதும் மீண்டும் கிராமத்திற்கு திரும்பினர்.இந்த தீ விபத்து குறித்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தினர் ஆய்வு மேற்கொண்டனர். தீ விபத்து குறித்து, சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர்.மிக பெரிய நிலப்பரப்பில் நச்சு கழிவுகளை கையாளும் இடத்தில், போதிய தீத்தடுப்பு தளவாடங்கள் இல்லாதது குறித்து, கேள்வி எழுப்பினர். தீயில் கருகிய கழிவுகளை சேகரித்து, ஆய்வுக்கூட பரிசோதனைக்கு அனுப்ப திட்டமிட்டு உள்ளனர்.மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலர் ஒருவர் கூறுகையில், ''இந்த தீ விபத்தால், சுற்றியுள்ள கிராமத்தினருக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. ''இருப்பினும் நச்சு கழிவு மேலாண்மை நிலையத்தின் பாதுகாப்பு தன்மையை மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்த பின்னரே, இயக்க வேண்டும் என வாய்வழி உத்தரவு பிறப்பித்திருக்கிறோம்,'' என்றார்.