பிள்ளையார்பாளையம் ஸ்ரீசீனிவாச பெருமாள் கருடவாகனத்தில் வீதியுலா
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், அனந்ததோஜி தெருவில், நவநீத கிருஷ்ணன் மற்றும் பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீசீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் ஆண்டுதோறும் மூன்றாவது வார சனிக்கிழமையன்று கருடசேவை உற்சவம் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையான நேற்று காலை 7:00 மணிக்கு மூலவர் சீனிவாச பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனம், மஹாதீபாராதனை, மலர் அலங்காரம் நடந்தது.தொடர்ந்து உற்சவர் சீனிவாச பெருமாள், கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டபம் தெரு, கிருஷ்ணன் தெரு, புதுப்பாளையம் தெரு உள்ளிட்ட முக்கிய வீதி வழியாக உலா வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீபாராதனை காண்பித்து சுவாமியை வழிப்பட்டனர். பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.காஞ்சிபுரம் -வந்தவாசி சாலை கூழமந்தல் பேசும் பெருமாள் கோவிலில் நேற்று காலை 8:00 மணிக்கு சிறப்பு தரிசனம் நடந்தது. மாலை சுவாமி வீதியுலாவும், இரவு 10:00 மணிக்கு ஆரணி வெற்றி நாடக மன்றத்தினரின் நாடகம் நடந்தது.காஞ்சிபுரம் அடுத்த கூரம் பஜனை கோவிலில் இரவு 7:00 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இரவு 10:00 மணிக்கு நாடகம் நடந்தது.