உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் ரூ.9.15 கோடிக்கு விற்ற விளை பொருட்கள்

காஞ்சி தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் ரூ.9.15 கோடிக்கு விற்ற விளை பொருட்கள்

உத்திரமேரூர்:தமிழகம் முழுதும் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் கீழ், 19 விற்பனை குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அதில், காஞ்சிபுரம் விற்பனை குழுவில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் உள்ளன.இந்த விற்பனை குழுவில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், சுங்குவார்சத்திரம், செங்கல்பட்டு, திருக்கழுகுன்றம், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, செங்குன்றம், நசரத்பேட்டை, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பள்ளிப்பட்டு ஆகிய 15 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விவசாயிகளிடம் இருந்து பெறப்படும், நெல், நிலக்கடலை, மிளகாய், உளுந்து, எள், பச்சை பயறு, துவரை, வெல்லம், முந்திரி, புளி, மக்காச்சோளம், தேங்காய் உள்ளிட்ட விளைபொருட்கள் ஏலம் வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.விவசாயிகள் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ், தங்களுடைய விளைபொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.அப்போது, இடைத்தரகர்களின் குறுக்கீடு ஏதும் இன்றி, நேரடியாக வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர். இந்த விற்பனை முடிந்த 48 மணி நேரத்திற்குள், விற்பனை தொகை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ், கடந்த 2024 ஏப்., 1 முதல் 2025 பிப்., 24 வரை, காஞ்சிபுரம் விற்பனை குழுவில் உள்ள 15 ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில், 5,020 டன் விளைபொருட்கள் 9.15 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதைத்தவிர, காஞ்சிபுரம் விற்பனை குழுவில் உள்ள அனைத்து ஒழுங்குமுறை விற்பனை கூட கிடங்குகளில், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் விளைபொருட்களை இருப்பு வைத்து, பொருளீட்டு கடன் பெற்று வருகின்றனர். அதன்படி, கடந்த 2024 ஏப்., 1 முதல் 2025 பிப்., 24 வரை, 21 விவசாயிகள் 61 லட்சம் மற்றும் 8 வியாபாரிகள் 16 லட்சம் பொருளீட்டு கடன் பெற்றுள்ளனர்.இதுகுறித்து, காஞ்சிபுரம் விற்பனைக்குழு செயலர் நடராஜன் கூறியதாவது:ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்வதால், அதிக லாபம் ஈட்டுகின்றனர். இடைத்தரகர்கள், 'கமிஷன்' இல்லாமல் முழுத்தொகையையும் விவசாயிகள் பெறுகின்றனர்.தொடர்ந்து, பண்ணை வயல் திட்டத்தின் கீழ், விவசாயிகளின் விளைநிலங்களுக்கே சென்று கொள்முதல் செய்து வருகிறோம். இதனால், விவசாயிகளுக்கு போக்குவரத்து செலவு மற்றும் காலவிரயம் ஆகியவை சேமிக்கப்படுகிறது. மேலும், விவசாயிகள் விளைபொருட்களை இருப்பு வைத்து பொருளீட்டு கடனும் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

விற்பனை செய்யப்பட்ட விளைபொருட்கள் மற்றும் விற்பனை தொகை

ஆண்டு விளைபொருட்கள் (டன்) விற்பனை தொகை(கோடியில்2021 -- 22 2,769 3.59 2022 -- 23 3,057 2.40 2023 -- 24 2,860 8.43


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை