காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் மழைநீர் வடிகால்வாய் சீரமைப்பு
காஞ்சிபுரம்:வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டம் முழுதும் உள்ள மழைநீர் கால்வாய்களை துார்வாரி சீரமைக்க காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி, நீர்வள ஆதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கு அறிவுறுத்தினார்.அதன்படி, நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள காஞ்சிபுரம் நகரின் பிரதான சாலைகளில், மழைநீர் வடிகால்வாய் துார்வாரப்பட்டு வருகிறது. இதில், ஒரு பகுதியாக காஞ்சிபுரம் -- வந்தவாசி சாலையில், மழைநீர் வெளியேறும் வகையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.இக்கால்வாயில் மண்டி கிடந்த மண் துகள் மற்றும் குப்பை குவியலை அகற்றி, கால்வாயில் மழைநீர் தடையின்றி செல்லும் நீர்வழித்தட பாதையை நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் துார்வாரி, கால்வாய் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.