உத்திரமேரூரில் சார் பதிவாளர் நியமிக்க கோரிக்கை
உத்திரமேரூர்:உத்திரமேரூரில், சார் பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு வரும் நிலையில், தற்போது வாடகை கட்டடத்தில் அலுவலகம் இயங்குகிறது.உத்திரமேரூரில் இயங்கும் சார் பதிவகத்தின் கட்டுப்பாட்டில், 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சொத்து விற்பனை, நிலம் அடமானம், ஒப்பந்தம், உயில் உள்ளிட்ட ஆவணங்களை பதிவு செய்யவும், திருமண பதிவு, பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகளை பெறவும் ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர். உத்திமேரூர் சார் பதிவாளர், ஒரு மாதத்திற்கு மேலாக மருத்துவ விடுப்பில் உள்ளார். இதனால், செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் சார் பதிவாளர் அலுவலக உதவி பதிவாளர், உத்திரமேரூர் அலுவலகத்தில் பொறுப்பு வகித்து பணிகளை மேற்கொண்டு வருகிறார்.இதனால், வில்லங்கச் சான்றிதழ், திருமண பதிவு நகல்கள் போன்றவற்றை பெறுவதிலும், பதிவு செய்த ஆவணங்களை திரும்ப பெறுவதிலும் காலதாமதம் ஏற்படுவதாக பலரும் கூறுகின்றனர்.எனவே, உத்திரமேரூரில், பதிவு பணிகள் தாமதமின்றி முறையாக மேற்கொள்ளும் வகையில், நிரந்தர சார் பதிவாளர் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.