| ADDED : ஏப் 16, 2024 06:58 AM
உத்திரமேரூர், : உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது பழவேரி கிராமம். இக்கிராமத்தில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரிக்கான கரைப்பகுதி ஒன்றரை கி.மீ., துாரம் கொண்டதாக உள்ளது.இந்த ஏரிக்கரையை பயன்படுத்தி அப்பகுதி விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களுக்கு, டிராக்டர், மாட்டுவண்டி மற்றும் நெல் அறுவடை இயந்திரங்களை ஏரிக்கரை வழியாக இயக்குகின்றனர். மழைக்காலத்தில் ஏரிக்கரை சகதியாகி விடுவதால், அச்சமயம் ஏரிக்கரை மீது வாகனங்களை இயக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:விவசாயம் சார்ந்த பணிகளுக்கு வாகனங்கள் இயக்க ஏரிக்கரை பயன்பாடாக உள்ளது. மேலும், மழைக்காலங்களில் இந்த ஏரிக்கரை வழியாகத்தான் கால்நடைகளை காட்டு பகுதிக்கு மேய்ச்சலுக்கு ஓட்டி செல்கிறோம்.காவணிப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று வரவும், இந்த ஏரிக்கரை பாதையை பயன்படுத்தி வருகிறோம். மழைக்காலங்களில், ஏரிக்கரை பாதை சகதியாகி விடுகிறது.அச்சமயம் ஏரிக்கரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, பழவேரி ஏரிக்கரையின் மண் பாதையை, தார் சாலையாக மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.