சீயமங்கலத்தில் கால்நடை மருந்தகம் ஏற்படுத்த கோரிக்கை
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், திம்மராஜம்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்டது சீயமங்கலம் கிராமம். சீயமங்கலம் மற்றும் அப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது.இந்த கிராமங்களில், பால் உற்பத்திக்காக கறவை பசுக்கள் மற்றும் எருமை மாடுகள் அதிகம் வளர்க்கப்படுகின்றன. மேலும், உழவு மாடுகளும் போதிய அளவில் பராமரிக்கப்படுகின்றன.ஆனால், இங்கு கால்நடை மருந்தகம் வசதி இல்லாமல் உள்ளது. இதனால், இப்பகுதியில் உள்ள ஆடு, மாடுகள் நோயுற்றால் 5 கி.மீ., தூரத்தில் உள்ள அய்யம்பேட்டை அல்லது வாலாஜாபாத் போன்ற பகுதியில் உள்ள கால்நடை மருந்தகம் சென்று, கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் நிலை தொடர்கிறது.எனவே, இந்த கிராமங்களை மையமாக கொண்டு சீயமங்கலம் கிராமத்தில் கால்நடை மருந்தகம் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.