காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்திற்கு புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் என, தமிழக அரசு 2017ல் அறிவிப்பு வெளியிட்டு, ஏழு ஆண்டுகளான நிலையில், இடம் தேர்வில் இன்றுவரை இழுபறியாக உள்ளது. அதிகாரிகள் நான்கு இடங்களை பார்த்த பிறகும், முடிவாகாததால், காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தபடி உள்ளது.தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் முதன்மையான மாவட்டங்களில் காஞ்சிபுரம் முக்கிய இடத்தில் உள்ளது. பல லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில், மக்களின் அடிப்படையான பல பிரச்னைகள் இன்னும் தீராமலேயே உள்ளன.காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில், 50 ஆண்டுகளுக்கு முன்பாக, 7 ஏக்கரில் அமைக்கப்பட்ட பஸ் நிலையம் இப்போதும் பயன்பாட்டில் உள்ளது. இங்கு, சராசரியாக ஒரு நாளைக்கு, 300 பஸ்கள் வந்து செல்கின்றன. இத்தனை பஸ்களும், நகருக்குள் வந்து செல்வதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, ரெட்டை மண்டபம், ராஜவீதிகள், காமராஜர் சாலை போன்ற இடங்களில் வாகன நெரிசல் ஏற்படுகிறது.இதனால், புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டிய தேவை, 10 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டது. இதனால், முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் என, அப்போதை முதல்வர் பழனிசாமி, 2017ல் அறிவிப்பு வெளியிட்டார்.அதைத் தொடர்ந்து கீழ்கதிர்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், பஸ் நிலையத்துக்கு இடம் தேர்வு செய்த பிறகும், நிலத்தை கையகபடுத்துவதில் ஏற்பட்ட குளறுபடியால், இன்று வரை பஸ் நிலையத்திற்கான இடம் முடிவாகாமல் உள்ளது.இதற்கிடையே, தி.மு.க., அரசு அமைந்தவுடன், காஞ்சிபுரம் பஸ் நிலையம் அமைக்க, 38 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. ஆனால், நிலமே இன்னும் முடிவாகாமல் உள்ளது.புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டிய தேவை நாமக்கல், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் இருந்தது. அந்த மாவட்டங்களில், புதிய பஸ் நிலையத்துக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, பஸ் நிலைய பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டன. ஆனால், காஞ்சிபுரத்திற்கு ஏழு ஆண்டுகளாக இடத்தை முடிவு செய்வதில் சிக்கல் நீடிக்கிறது.காஞ்சிபுரம் அருகே பொன்னேரிக்கரையில், சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தை, பஸ் நிலையத்துக்கு தேர்வு செய்ய, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் கார்த்திகேயன், கடந்தாண்டு ஆய்வு செய்தார்.ஆனால், நிலத்தை பஸ் நிலையத்துக்கு கையகபடுத்த எதிர்ப்பு தெரிவிக்கும் அறக்கட்டளை நிர்வாகம், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, இடைக்கால தடை பெற்றுள்ளது. இதனால், பொன்னேரிக்கரையில் தேர்வான இடமும், கேள்விக் குறியாகியுள்ளது.
இடம் தேர்வில் ஏழு ஆண்டுகள் நீடித்த இழுபறி விபரம்
* புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் என, 2017ல், முன்னாள் முதல்வர் பழனிசாமி, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் அறிவிப்பு வெளியிட்டார்* காஞ்சிபுரம் அருகே கீழ்கதிர்பூரில், புதிய பஸ் நிலையம் அமைக்க, 10 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது* கீழ்திர்பூர் விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததால், கீழ்கதிர்பூர் இடம் கைவிடப்பட்டது* 2021ல், தி.மு.க., ஆட்சி அமைந்த பின், சித்தேரிமேடு பகுதியில் உள்ள தனியார் அறக்கட்டளையின் இடம் தேர்வு செய்ய ஆலோசிக்கப்பட்டது. அந்த இடம் கையகப்படுத்துவதில், சட்ட சிக்கல் இருந்ததால் கைவிடப்பட்டது.* 2023ல், சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், அண்ணா பொறியியல் கல்லுாரி அருகில், நான்கு பேருக்கு சொந்தமான தனியார் நிலம், 10 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடத்தை கைவிடுவதற்கான காரணத்தை, வெளிப்படையாக யாரும் தெரிவிக்கவில்லை* 2023 ஏப்ரலில், அமைச்சர் அன்பரசன், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், மூன்று இடங்களில் ஆய்வு செய்தார். அப்போது, அமைச்சர் நேருவை அழைத்து வந்து இடங்களை காட்டுவதாக கூறினார். ஆனால், இடம் தேர்வு இழுபறியானது* 2023 இறுதியில், பொன்னேரிக்கரையில் தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான இடம் முடிவு செய்யப்பட்டது. நகராட்சி நிர்வாகத் துறை செயலர் கார்த்திகேயன், பொன்னேரிக்கரையில் ஆய்வு செய்தார். ஆனால், அந்த இடமும் தற்போது நீதிமன்ற வழக்கில் சிக்கலாகியுள்ளது.
வழக்கு தொடுத்த அறக்கட்டளை!
வருவாய் துறையின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'பொன்னேரிக்கரையில் உள்ள தனியார் அறக்கட்டளைக்கு, 40 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழக அரசு பல ஏக்கர் இடம் கொடுத்துள்ளது. அதில், பஸ் நிலையம் அமைக்க வேண்டிய 10 ஏக்கர் நிலமே நாம் கேட்கிறோம். நிலம் கையகபடுத்த, ஆர்.டி.ஓ., விசாரணைக்கு தடை கேட்டு, அறக்கட்டளை நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, இடைக்கால தடை பெற்றுள்ளனர். அந்த தடையை நீக்க நாங்கள் பதில் மனு தாக்கல் செய்ய உள்ளோம்' என்றார்.
காரை- - வெள்ளைகேட் இடையே இடம் தேவை
சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தேர்வு செய்யப்பட்ட மூன்று இடங்களும் முடிவாகாமல், இன்று வரை பஸ் நிலையம் அமைக்க முடியாத நிலையே நீடிக்கிறது.காரைப்பேட்டையிலிருந்து வெள்ளைகேட் இடையே மட்டுமே இன்றைய சூழலில் பஸ் நிலையம் அமைக்க முடியும். வெள்ளைகேட்டை அல்லது காரைப்பேட்டையை கடந்து துாரமான இடங்களில் பஸ் நிலையம் அமைந்தால், நகர மக்களால் செல்ல முடியாத நிலை ஏற்படும் என்கின்றனர்.மேலும், நெடுஞ்சாலையையொட்டி, பஸ் நிலையம் அமைக்க தேவையான 10 ஏக்கர் நிலம், ஒரே இடத்தில் வேறு எங்கும் இல்லை என, வருவாய் துறையினர் புலம்புகின்றனர்.