உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கட்டுப்படியாகாத விலையால் கரும்பு சாகுபடி குறைவு மாற்றுப்பயிருக்கு தாவும் விவசாயிகள்

கட்டுப்படியாகாத விலையால் கரும்பு சாகுபடி குறைவு மாற்றுப்பயிருக்கு தாவும் விவசாயிகள்

உத்திரமேரூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில், கரும்பு அதிகம் பயிரிடப்படும் சீட்டணஞ்சேரி கரும்பு மண்டலத்தில், 40 சதவீத விவசாயிகள் கரும்பு பயிரை கைவிட்டு, மாற்றுப் பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளதால், அப்பகு தியில் கரும்பு விவசாயம் முற்றிலும் குறைந்துள்ளது.உத்திரமேரூர் ஒன்றியத்தில் பாலாற்றங்கரையை ஒட்டி சீட்டணஞ்சேரி, சாத்தணஞ்சேரி, குருமஞ்சேரி, களியப்பேட்டை, ராஜம்பேட்டை, பினாயூர், அரும்புலியூர், விச்சூர், காவூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன.இங்கு, பல ஆண்டுகளாக கரும்பு விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதிகளில் பயிரிட்டுள்ள கரும்புகளை, அறுவடைக்குப் பின், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த படாளத்தில் இயங்கும் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் அரவைக்கு அனுப்புகின்றனர்.

2 லட்சம் டன்

படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், ஆண்டுதோறும் அரவை செய்யப்படும் மொத்த கரும்புகளில் 40 சதவீதம், சீட்டணஞ்சேரி கரும்பு மண்டலம் வாயிலாக உற்பத்தி செய்யும் கரும்புகளாக உள்ளது.இவ்வாறு கரும்பு பயிரிடுவதில் முதன்மை வகித்த இப்பகுதி விவசாயிகள், தற்போது நெல் உள்ளிட்ட மாற்றுப்பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கடந்தாண்டு அரவை பருவத்திற்கு, 2 லட்சம் டன் எடையிலான கரும்பு அரவை செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டு 1.25 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது வரை 50,000 டன் கரும்பு மட்டுமே அரவை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கரும்பு சாகுபடி குறைந்து வருவது, விவசாயிகள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, சாத்தணஞ்சேரி கரும்பு விவசாயியும், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவருமான தனபால் கூறியதாவது:தற்போது கரும்புக்கான விலையாக, மாநில அரசு வாயிலாக வழங்கப்படும் 215 ரூபாயை சேர்த்து, மொத்தமாக டன்னுக்கு 3,366 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. ஆனால், ஒரு டன் கரும்பு உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு 3,600 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது.கரும்பு விலையை கூடுதலாக்க வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தியும், அதற்கான நடவடிக்கை இல்லை. கரும்புக்கான விலை குறைவாக இருப்பதும், கரும்புகளை வெட்ட ஆட்கள் பற்றாக்குறை பிரச்னையும் முக்கிய பிரச்னையாக உள்ளது.கரும்பு வெட்ட உள்ளூரில் ஆட்கள் கிடைப்பதில்லை. விழுப்புரம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து ஆட்கள் கிடைத்தாலும், 1 டன்னுக்கு 1,800 ரூபாய் வரை கூலி கேட்கின்றனர்.

ஆட்கள் பற்றாக்குறை

கரும்பு வெட்ட ஆட்கள் தட்டுப்பாடு நிலவுவதால், கரும்பு பயிரிடும் விவசாயிகளான நில உரிமையாளர்கள், போட்டி போட்டு ஆட்களை பிடித்து வருகின்றனர். இதன் காரணமாக, வெட்டுக்கூலி தொடர்ந்து அதிகரிக்கும் நிலை உள்ளது. இதனால், கரும்பு சாகுபடி வாயிலாக கிடைக்கும் மொத்த வருவாயில், அதிகளவிலான தொகை கரும்பு வெட்டுக் கூலிக்கே செலவிட வேண்டியுள்ளது. மேலும், தற்போதைய பருவநிலை மாற்றம் காரணமாக கரும்பு சாகுபடியில், மஞ்சள் இலை நோய், கரும்பு தோட்டத்தில் வெள்ளை ஈக்கள் தாக்கம் போன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்படுகிறது. கடந்த ஆண்டுகளில் எப்போதாவது இவ்வாறான நோய் தாக்குதல் இருக்கும். மேலும், காட்டுப்பன்றிகளின் தொந்தரவும், தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால், கரும்பு மகசூல் ஆண்டுக்காண்டு மிகவும் குறைந்து வருகிறது. சீட்டணஞ்சேரி கரும்பு மண்டலத்திற்கு உட்பட்ட சாத்தணஞ்சேரி கிராமம், கடந்த ஆண்டுகளில், 1,000 ஏக்கர் நிலப்பரப்பு வரை கரும்பு பயிரிடப்பட்ட பகுதியாக இருந்தது. தற்போது, 300 ஏக்கருக்கும் குறைவாகவே கரும்பு பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.

பல்வேறு பிரச்னைகள்

இவ்வாறு, ஆண்டுதோறும் தொடர்ந்து கரும்பு சாகுபடி குறைந்து வருவதை காண முடிகிறது. கரும்பு சாகுபடி மேற்கொள்ளாத விவசாயிகள், நெல், வேர்க்கடலை, உளுந்து என, ஏதாவது ஒரு மாற்றுப்பயிரை தேர்வு செய்து, தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட முடியும். ஆனால், கரும்பு உற்பத்தி குறைவால், கரும்பு ஆலைக்கு பாதிப்பு, சர்க்கரை உற்பத்தி பாதிப்பு என, பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, கரும்பு சாகுபடி குறைவதற்கான காரணிகள் மற்றும் அதை அதிகரிக்க செய்தல் குறித்து, விவசாயிகள் இடையே அரசு கலந்தாலோசித்து, விவசாயிகளின் பாதிப்புகளை களையவும், கரும்பு சாகுபடியை அதிகரிக்க செய்யவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்இவ்வாறு அவர் கூறினார்.

1. ஒரு டன் கரும்புக்கு 5,000 ரூபாய் வழங்க வேண்டும்

2. வெட்டுக்கூலி செலவை அரசு ஏற்க வேண்டும்3. கரும்பு அறுவடை இயந்திரங்கள் அதிகரிக்க செய்தல்4. கரும்பு அறுவடை இயந்திரத்திற்கான வாடகை கட்டணம், அரசால் நிர்ணயம் செய்துள்ளதைப் போல், வெட்டுக்கூலியையும் நிர்ணயம் செய்ய வேண்டும்

கரும்பு விலை

2. ஆட்கள் தட்டுப்பாடு3. கரும்பு வெட்டுக்கூலி அதிகரிப்பு 4. பருவநிலை மாற்றத்தால் நோய் தாக்கம் 5. நோய்த்தாக்கத்தால் மகசூல் குறைவு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை