அம்பத்துாரில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரிந்தது கள்ளக்காதலன் தற்கொலை முயற்சி
அம்பத்துார்:அம்பத்துார் காவல் நிலையம் மற்றும் அம்பத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே, பாழடைந்த 'டன்லப்' தொழிற்சாலை வளாகம் உள்ளது.இங்கு, நேற்று முன்தினம் காலை நிர்வாணமான நிலையில், காயங்களுடன் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரது சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. இறந்து இரண்டு நாட்களுக்கும் மேலாவது தெரிய வந்தது. அம்பத்துார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.சடலத்தை கைப்பற்றிய இரண்டு மணி நேரத்தில், கண்காணிப்பு கேமரா உதவியுடன் அம்பத்துார் ஏரிக்கரை அருகே மது போதையில் சுற்றித்திரிந்த கொலையாளியை போலீசார் பிடித்தனர்.அவரிடம் விசாரித்ததில் தெரிய வந்ததாவது: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்தவர் சரண்யா, 35. இவர், அதே பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் பணிபுரிந்துள்ளார். இவருக்கு செல்வராஜ் என்பவருடன் திருமணமாகி, 12 வயதில் ஒரு மகன் உள்ளார். பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜா, 32. இவர், சரண்யா வேலை பார்த்த அதே துணிக் கடையில், தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்; ராஜா திருமணமாகி விவாகரத்து பெற்றவர். ராஜாவுக்கும், சரண்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. சரண்யா வீட்டைவிட்டு வெளியேறி, மூன்று மாதங்களுக்கு முன் அம்பத்துார், சத்யா நகருக்கு ராஜாவுடன் குடியேறினார்.சரண்யா அதே பகுதியில் உள்ள பல் மருத்துவமனையில் பராமரிப்பு பணி செய்து வந்துள்ளார். ராஜா வாடகை கார் ஓட்டுனராக பணிபுரிந்தார்.இந்நிலையில், சரண்யா அவரது கணவர் செல்வராஜுடன் அடிக்கடி மொபைல்போனில் பேசியது ராஜாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த புதன்கிழமை இரவு பணி முடித்து இருவரும் வீடு திரும்புகையில், பாழடைந்த டன்லப் தொழிற்சாலை வழியாக வந்துள்ளனர். அப்போது மது அருந்துவதற்காக, அந்த தொழிற்சாலைக்குள் சென்றுள்ளனர்.மது அருந்திவிட்டு இருவரும் உல்லாசமாக இருந்த நிலையில், சரண்யா, அவரது கணவருடன் பேசுவதை கைவிட வேண்டும் எனக்கூறி, ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.வாக்குவாதம் முற்றியதில், தான் ஏற்கனவே எடுத்து வந்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, சரண்யாவின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சரண்யா உயிரிழந்தார்.பின்னர் துணியை எடுத்து சரண்யாவின் உடலில் சுற்றி, அங்கிருந்த அறைக்குள் வீசி சென்றுள்ளார்.இவ்வாறு அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.இந்த நிலையில், 'போலீசார் தன்னை நெருங்கியதை அறிந்து, தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து, விஷம் அருந்தியுள்ளதாக' தெரிவித்தார்.அதிர்ச்சியடைந்த போலீசார், அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது ராஜா அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.