மின் மோட்டார் அமைக்காததால் காட்சி பொருளான குடிநீர் தொட்டி
ஆனம்பாக்கம், உத்திரமேரூர் ஒன்றியம், ஆனம்பாக்கத்தில் கோடைக்காலத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும், மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதல் குடிநீர் ஆதாரம் ஏற்படுத்தவும் கோரிக்கை எழுந்தது.அதன்படி, ஊரக வளர்ச்சித் துறை சார்பில், 2022 - 23ம் ஆண்டு, ஜே.ஜே.எம்., சேமிப்பு நிதியின் கீழ், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ஆனம்பாக்கம் ஏரிக்கரையொட்டி கட்டப்பட்டது.இதற்கான பணி முடிந்து ஓராண்டு நிறைவு பெற்றும், தண்ணீர் ஏற்றி குடிநீர் வினியோகிக்காமல் உள்ளது. தற்போது கோடைக்காலம் துவங்கி உள்ளதால், இப்பகுதியில் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் நிலை உள்ளது.எனவே, ஆனம்பாக்கத்தில் புதிதாக கட்டி உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர் ஒருவர் கூறியதாவது:புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்ற தேவையான குழாய் பொருத்துதல் மற்றும் மின்மோட்டார் அமைத்தல் ஆகிய பணி மேற்கொள்ள வேண்டி உள்ளது.அப்பணிகள் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றி, குடிநீர் வினியோகம் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.