சிமென்ட் சாலையை உடைத்து குடிநீர் குழாய் பதிக்கும் பணி
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், சிறுமாங்காடு ஊராட்சியில், நல்ல நிலையில் உள்ள சிமென்ட் சாலையை உடைந்து, சாலை நடுவே குடிநீர் குழாய் பதிப்பது, அப்பகுதியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், சிறுமாங்காடு ஊராட்சியில் 700க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள உட்புற சாலைகள் அனைத்தும் சிமென்ட் சாலைகளாக சில ஆண்டுகள் முன் அமைக்கப்பட்டன.இந்த நிலையில், தற்போது புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து, வீடுகளுக்கு குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.இதற்காக, நல்ல நிலையில் உள்ள சிமென்ட் சாலையில் மத்தியில் இரண்டு அடி அகலத்தில் சாலை வெட்டி எடுக்கப்பட்டு குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு வருகிறது.தரமான சிமென்ட் சாலையில், 500 மீட்டர் துாரத்திற்கு சாலை வெட்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளபடுவது அப்பகுதியினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதுஇது குறித்து அப்பகுதியினர் கூறியதாவது;சாலையை உடைந்து குடிநீர் குழாய் பதிப்பதால், தரமான சாலை முற்றிலும் சேதடைந்து உள்ளது. குழாய் பதிக்கும் பணிக்கு பின், அதன் மேல் சிமென்ட் கொட்டி சாலை அமைத்தாலும், சாலையில் ஏற்ற இறக்கமாகவே இருக்கும், இதானால் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தடுமாற்றம் ஏற்படும்.இது குறித்து ஊராட்சி நிர்வாத்திடம் கேட்ட போது, 'அனுமதி பெறாமல் குடிநீர் இணைப்பு பெறுவதை தடுக்க இது போன்று சாலை நடுவில் குழாய் பதிக்கப்படுகிறது. மேலும், சாலையோரங்களில் கழிவுநீர் செல்வதால், பாதுகாப்பாக சாலை நடுவே குடிநீர் குழாய் அமைக்கப்படுகிறது.' என்றார்.