கொலை நடந்ததால் மூடப்பட்ட ரேஷன் கடை திறக்க திருக்காலிமேடினர் வலியுறுத்தல்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாமல்லன் நகரைச் சேர்ந்தவர் ராஜா என்கிற வசூல் ராஜா, 38; இவர் மீது கொலை, கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல், அடிதடி என, 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.காஞ்சிபுரம் நகரில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் இவர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசாரால் சரித்திர பதிவேடு துவக்கப்பட்டு ‛ஏ பிளஸ்' ரவுடி பிரிவின் கீழ், இவர் கண்காணிக்கப்பட்டு வந்தார்.இந்நிலையில், கடந்த 11ம் தேதி, பிற்பகல் 12:00 மணியளவில் காஞ்சிபுரம், திருக்காலிமேடு ரேஷன் கடை எண்.1, அருகில், வசூல் ராஜா தனியாக நின்று கொண்டிருந்தார்.அப்போது,, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த ஐந்து பேர், திடீரென நாட்டு வெடிகுண்டை வசூல் ராஜா மீது வீசியுள்ளனர்.இதில் நிலை தடுமாறி விழுந்த வசூல் ராஜாவின் முகம் மற்றும் உடலின் பல்வேறு பாகங்களில் கத்தியால் சரமாரி வெட்டினர். படுகாயமடைந்த வசூல் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதையடுத்து, அப்பகுதியில் பதற்றம் ஏற்பபட்டது. ரேஷன் கடையில் இருந்த ஊழியர் கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இதையடுத்து, இரு நாட்களாக திருக்காலிமேடு கடை எண்.1, ரேஷன் கடை திறக்கப்படவில்லை.இக்கடையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வருவோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். எனவே, மூடி கிடக்கும் திருக்காலிமேடு கடை எண்.1, ரேஷன் கடையை திறந்து, அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டும் என, கார்டுதாரர்கள் வலியுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து காஞ்சிபுரம் வட்ட வழங்கல் அலுவலர் லட்சுமி கூறியதாவது:ரேஷன் கடை அருகில் கொலை நடந்ததால், கடை ஊழியர் பயத்தில் கடையை மூடிவிட்டு விடுப்பில் சென்றுவிட்டார். வெள்ளிக்கிழமை ரேஷன் கடைக்கு விடுமுறை. சனிக்கிழமை ரேஷன் கடை திறக்கபட்டு அத்தியாவசிய பொருட்கள் வழக்கம்போல வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.