உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வேகவதி ஆற்றில் குழாய் பதித்து கழிவுநீர் வெளியேற்றம் அட்டூழியம் வீடு, வணிக வளாகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

வேகவதி ஆற்றில் குழாய் பதித்து கழிவுநீர் வெளியேற்றம் அட்டூழியம் வீடு, வணிக வளாகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாநகராட்சி குடியிருப்பு கட்டடங்களில் இருந்து அன்றாடம் மில்லியன் கணக்கிலான லிட்டர் கழிவுநீர் நேரடியாக வேகவதி ஆற்றில் கலக்கிறது. ஆற்றை பாதுகாக்க வேண்டிய மாநகராட்சி மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு, செய்யாறு, வேகவதி என, மூன்று ஆறுகள் பாய்கின்றன. இதில், தாமல் ஏரியின் கலங்கல் பகுதியில் துவங்கும் வேகவதி ஆறு, முசரவாக்கம், கீழ்கதிர்பூர், காஞ்சிபுரம் நகர், தேனம்பாக்கம், நத்தப்பேட்டை வழியாக வில்லிவலம் பகுதியில் பாலாற்றுடன் கலக்கிறது. இதன் மொத்த நீளம், 26 கி.மீட்டர்.நீர்வளத் துறையின் போதுமான பராமரிப்பு இல்லாததால், முசரவாக்கம், திருப்புட்குழி, கீழம்பி கிராமங்களில் பலர், வேகவதி ஆற்று நீர்பிடிப்பு பகுதியில் செங்கல் சூளையை நடத்தி வருகின்றனர்.இது ஒருபுறம் இருக்க, ஆற்றின் கரையோரமும், ஆற்றுக்கு உள்ளேயும் 1,500க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை இதுவரை, அதிகாரிகள் அகற்றாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

மாசடையும் நீர்

செங்கல் சூளைகளின் ஆதிக்கம், ஆக்கிரமிப்பு வீடுகள் போன்றவற்றால் சீரழிந்து வரும் வேகவதி ஆற்றில், வீடுகளின் கழிவுநீரும் பல மில்லியன் லிட்டர் அன்றாடம் கலப்பதால், மேலும் நாசமாகி வருகிறது.ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையின்போது மட்டுமே வேகவதி ஆற்றில், மழைநீர் செல்வதை காண முடிகிறது. மற்ற நாட்களில், வீட்டு உபயோக கழிவுநீர் மட்டுமே பாய்கிறது.இதனால், வேகவதி ஆற்றங்கரையோர பகுதியில், சின்ன காஞ்சிபுரம் சுற்றிய பகுதிகளில், நிலத்தடி நீர் மாசடைந்து குடிக்க முடியாத சூழலுக்கு மாறியுள்ளது.இந்நிலையில், காஞ்சிபுரத்தின் நகர பகுதியில் வசிப்போர், கழிவுநீரை வேகவதி ஆற்றில் விடுவதற்காகவே, தனியாக குழாய் பதித்துள்ளது, பலரிடம் அதிருப்தியை கிளப்பியுள்ளது.சின்ன காஞ்சிபுரம் சேஷாத்ரிபாளையம் தெரு, நாகலுாத்து தெரு, அமுதுபடி பின் தெரு, வெங்கடேஸ்வரா நகர், சித்தி விநாயகர் பூந்தோட்டம் தெரு பகுதிகளில் உள்ள வீடுகள், உணவகங்கள், திருமண மண்டபங்கள், லாட்ஜ்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செல்ல வேண்டும்.ஆனால், முறைகேடாக, அவற்றை வேகவதி ஆற்றில் கலப்பதற்காக, பெரிய அளவிலான குழாய் பதித்துள்ளனர்.

அத்துமீறல்

காஞ்சிபுரம் சித்தி விநாயகர் பூந்தோட்டம் மட்டுமின்றி, வேகவதி ஆற்றில் பல்வேறு இடங்களில் கழிவுநீர் ஆற்றில் கலக்கிறது. இதை தடுக்காமல், மாநகராட்சி நிர்வாகம் வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அப்பகுதிவாசிகள் கூறியதாவது:வேகவதி ஆற்றை ஒட்டிய பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து, கழிவுநீர் வெளியேற்ற குழாய் பதிக்கப்பட்டுள்ளது. ஆற்றை துாய்மையாக பராமரிக்க, வீடு மற்றும் வணிக வளாகங்களில் இருந்து ஆற்று வரை பதிக்கப்பட்டுள்ள குழாய் இணைப்பை துண்டிக்க வேண்டும்.இதை, மாநகராட்சி கண்டும் காணாமலும் இருப்பதால், இது போன்று அத்துமீறல் மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனர் நவேந்திரனிடம் கேட்டபோது, ''வேகவதி ஆற்றில் கழிவுநீர் கலப்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.கால்நடைகளுக்கு பாதிப்புபழமையான ஆறுகளில் ஒன்றான வேகவதி ஆற்றில், கழிவுநீர் ஓடுவது வேதனை அளிக்கிறது. ஆற்றில் செல்லும் கழிவுநீரை பருகும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. நீர்நிலைகளை பாதுகாப்பது அனைவரின் கடமை. ஆற்றில் கழிவுநீர் விடுவதை தடுக்க, மாநகராட்சி முன்வர வேண்டும்.- பசுமை மேகநாதன்,பசுமை இந்தியா தன்னார்வ அமைப்பு, காஞ்சிபுரம்.கடிதம் எழுதப்படும்காஞ்சிபுரம் சித்தி விநாயகர் பூந்தோட்டம் பகுதியில், பாதாள சாக்கடை கழிவுநீரை வேகவதி ஆற்றில் நேரிடையாக விடுவது குறித்து, அப்பகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்து, மாநகராட்சி நிர்வாகத்திற்கு இது சம்பந்தமாக கடிதம் அனுப்பப்படும்.- நீர்வளத்துறை பொறியாளர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி