மாமல்லபுரம் : செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள எட்டு பேரூராட்சிப் பகுதிகளில், தெருவிளக்குகளை, 10,012 மின்சார பயன்பாட்டை சிக்கனப்படுத்தும் எல்.இ.டி., விளக்குகளாக மாற்ற தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இதற்காக, 7.42 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், மின்சாரம் பயன்பாடு 40 சதவீதம் குறைந்து, பேரூராட்சிகளின் மின்கட்டண செலவு குறைய வாய்ப்பு உள்ளதாக, பேரூராட்சி அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆறு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூன்று என, காஞ்சிபுரம் மண்டலத்தில் ஒன்பது பேரூராட்சிப் பகுதிகள் உள்ளன. பேரூராட்சி நிர்வாகங்கள், அதன் எல்லைக்குட்பட்ட பிரதான சாலைகள், வசிப்பிட தெருக்கள் ஆகிய பகுதிகளில், இரவில் வெளிச்சத்தின் அவசியம் கருதி, சோடிய ஆவி, குழல் உள்ளிட்ட வகை தெரு விளக்குகள் அமைத்துள்ளன.இத்தகைய விளக்குகள் ஒளிர்வதற்கு, அதிக மின்சாரம் பயன்படுத்தப்படும் நிலையில், நிர்வாகத்திற்கு மின்கட்டண செலவும் அதிகரிக்கிறது. தற்காலத்தில், வசிப்பிட பகுதிகள் விரிவடைந்து, புதிய தெருக்கள் உருவாகியுள்ளன. இதனால், தெரு விளக்குகளும் அதிகரித்து, மின்சார கட்டணமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.நிர்வாகத்திற்கு ஏற்படும் மின்கட்டண செலவை குறைக்க கருதி, அனைத்து வகை தெருவிளக்குகளையும் மின்சிக்கன எல்.இ.டி., விளக்குகளாக மாற்றியமைக்க முடிவெடுத்த தமிழக அரசு, இதுகுறித்து கடந்த 2022ல் உத்தரவிட்டது. இவ்வகை விளக்கால், மின்சார பயன்பாடு 40 சதவீதம் குறைந்து, மின்கட்டண செலவும் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின்படி, மாநிலம் முழுதும், 439 பேரூராட்சிப் பகுதிகளில், 2 லட்சத்து 66 ஆயிரத்து 953 விளக்குகளை அகற்றப்பட்டு, எல்.இ.டி., விளக்காக மாற்றப்படவுள்ளது.ஒவ்வொரு பேரூராட்சி பகுதியிலும், பொதுமக்கள் நடமாட்டத்தின் சூழலுக்கேற்ப, 120 வாட்ஸ், 90 வாட்ஸ், 20 வாட்ஸ் என, வெவ்வேறு மின்திறனில் விளக்குகள் அமைக்கப்படும்.மாநில நகர்ப்புற உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதி 2022 - 23 திட்டத்தின்கீழ், 'டுபிட்கோ' எனப்படும் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் நிறுவன கடனுதவி வாயிலாக, இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தை செயல்படுத்துவதுடன், 10 ஆண்டுகளுக்கு விளக்குகளை இயக்கி பராமரிக்கும் வகையில், தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டு, பேரூராட்சியில் ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில், திருப்போரூர் பேரூராட்சி தவிர்த்து, இடைக்கழிநாடு, திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், அச்சிறுபாக்கம், கருங்குழி ஆகிய ஐந்து பேரூராட்சிப் பகுதிகளில், 5.24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.திருப்போரூர் பேரூராட்சியில், பொதுநிதியில் ஏற்கனவே எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதால், அங்கு மட்டும் திட்டம் தவிர்க்கப்பட்டுள்ளது.அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில், உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய பேரூராட்சிகளில், 2.06 கோடி ரூபாய் மதிப்பில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.பேரூராட்சி பகுதிகளில் தெரு விளக்குகளை எல்.இ.டி., விளக்குகளாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. ஆனால், திட்டத்தை செயல்படுத்த தீர்மானித்து ஓராண்டிற்கும் மேல் ஆகியும், தெருவிளக்குகளை புதிதாக மாற்ற இயலவில்லை. இப்போது, 'டெண்டர்' விடப்பட்டுள்ளது. ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, விரைவில் எல்.இ.டி., விளக்குகள் அமைக்கும் பணி துவங்கும்.- பேரூராட்சி அலுவலர்,மாமல்லபுரம்.
செங்கல்பட்டு மாவட்டம்
பேரூராட்சி விளக்குகள் எண்ணிக்கை மதிப்பீடு (கோடியில்)இடைக்கழிநாடு 3,152 2.02திருக்கழுக்குன்றம் 1,538 1.48மாமல்லபுரம் 755 0.65அச்சிறுபாக்கம் 744 0.59கருங்குழி 823 0.50 காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் 1,544 0.82வாலாஜாபாத் 989 0.65ஸ்ரீபெரும்புதுார் 816 0.59