அடையாற்றில் திட, திரவ கழிவுகளை வெளியேற்றிய 131 குழாய்கள் துண்டிப்பு
காஞ்சிபுரம்:குன்றத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட அடையாறு ஆற்றில், திட, திரவ கழிவுகளை வெளியேற்றிய 131 குழாய்கள் துண்டிக்கப்பட்டு உள்ளதாக, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார்.அவ்வாறு கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திகுறிப்பு:குன்றத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட அடையாறு ஆறு செல்லக்கூடிய ஆதனூர், வரதராஜபுரம், திருமுடிவாக்கம், தரப்பாக்கம், கெருகம்பாக்கம், மௌலிவாக்கம் மற்றும் கொளப்பாக்கம் ஆகிய ஊராட்சி பகுதிகள், சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையில் உள்ளடக்கிய பகுதிகளாகும்.கழிவுநீர் கலப்பதை தடுக்க, ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகியோரை கொண்ட பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.மேலும், திடக்கழிவு மற்றும் திரவக்கழிவு அடையாறு ஆற்றில் கலக்காத வகையில் பல இடங்களை கண்டறிந்து, தினமும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.திட மற்றும் திரவக் கழிவுகள் நீர்நிலைகளை பாதிக்காத வகையில் வட்டார அளவிலும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.கண்காணிப்பு கேமரா வாயிலாகவும் கண்காணிக்கப்பட்டு மீறுவோர் மீது அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.அடையாறு ஆறு சுற்றியுள்ள பகுதிகளில் பொது மக்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் திடக்கழிவு மற்றும் கழிவுநீர் ஆகியவை கொட்டக்கூடாது.தனி நபர் வீடுகளில் இருந்து அடையாறு ஆற்றில் வெளியேற்றப்படும் கழிவுநீரை கட்டுப்படுத்த, அறிவிப்பு கடிதம் வழங்கப்பட்டு, இதுவரை 131 கழிவுநீர் வெளியேற்றப்படும் குழாய்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.அடையாறு ஆற்றில் திட, திரவ கழிவு கொட்டுவோர் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.