உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அகற்றப்பட்ட 75 மரங்களுக்கு பதில் 140 மரக்கன்றுகள் நடவு

அகற்றப்பட்ட 75 மரங்களுக்கு பதில் 140 மரக்கன்றுகள் நடவு

உத்திரமேரூர்: மங்கலம் பகுதியில் செல்லும் புக்கத்துறை -- மானாம்பதி நெடுஞ்சாலையோரத்தில், உத்திரமேரூர் நெடுஞ்சாலை துறையினர் மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் நெடுஞ்சாலை கோட்டம், உத்திரமேரூர் உதவி கோட்ட எல்லையில், புக்கத்துறை --- மானாம்பதி நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையை பயன்படுத்தி, தினமும் 2,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன. இருவழிச் சாலையான இச்சாலையில் அடிக்கடி விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தன. இதைத் தவிர்க்க வாகன ஓட்டிகள் இச்சாலையை நான்குவழிச் சாலையாக மாற்ற கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, முதல் கட்டமாக புக்கத்துறை முதல், குமாரவாடி வரை, 3.6 கி.மீ., மீனாட்சி கல்லுாரி முதல், உத்திரமேரூர் வரை, 1.5 கி.மீ., துாரமுள்ள சாலையை 42 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது, இரண்டாம் கட்டமாக, பள்ளியகரம் முதல், நெல்வாய் வரை, 3.5 கி.மீ., நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இப்பணியின் போது சாலையோரத்தில் இருந்த 75 மரங்கள் அகற்றப்பட்டன. இதற்கு பதிலாக, உத்திரமேரூர் நெடுஞ்சாலை துறையினர் வேம்பு, புங்கன், பாதாம், நாவல் உள்ளிட்ட 140 மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிட்டனர். இந்நிலையில், மங்கலம் பகுதியில் செல்லும் நெடுஞ்சாலையோரத்தில், நேற்று மரக்கன்றுகள் நடும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ