நலன் காக்கும் திட்ட முகாமில் 1,400 பேருக்கு பரிசோதனை
வாலாஜாபாத்:ஏகனாம்பேட்டையில் நடந்த நலன் காக்கும் திட்ட முகாமில், 1,400 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏகனாம்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடந்தது. ஏகனாம்பேட்டை, கருக்குப்பேட்டை, அய்யம்பேட்டை, முத்தியால் பேட்டை, திம்மராஜம்பேட்டை, கோயம்பாக்கம், வில்லிவலம், தாங்கி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தோர், உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற பங்கேற்றனர். முகாமை உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் துவக்கி வைத்தார். பொதுமருத்துவம், எலும்பு மூட்டு மருத்துவம், மகப்பேறு மகளிர் நல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், இதய மருத்துவம், நரம்பியல் மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகளை பார்வையிட்டு, செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, கர்ப்பிணியருக்கு ஊட்டச்சத்து பெட்டகம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து, மாத்திரைகள் பெட்டகம், தொழிலாளர் நலவாரிய அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முகாமில் 1,400 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், வாலாஜாபாத் ஒன்றியக்குழு தலைவர் தேவேந்திரன், துணை தலைவர் சேகர் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.