உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அனுமதியில்லாத 150 எம் - சாண்ட் கிரஷர்கள் லாரி உரிமையாளர் சங்கம் பகீர் குற்றச்சாட்டு

அனுமதியில்லாத 150 எம் - சாண்ட் கிரஷர்கள் லாரி உரிமையாளர் சங்கம் பகீர் குற்றச்சாட்டு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 'எம்-சாண்ட்' உற்பத்தி செய்யும் 162 கிரஷர்களில், 150 இடங்களில் அனுமதியின்றி கிரஷர்கள் அனுமதியின்றி செயல்படுத்துவோர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு பகீர் குற்றச்சாட்டு தெரிவிக்கிறது.தமிழகத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதியுடன் நுாற்றுக்கணக்கான 'எம் - -சாண்ட்' நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கனிமவளத்துறை வாயிலாக கல்குவாரி நடத்தும் நிறுவனங்கள், எம்- - சாண்ட் தயாரித்து விற்பனை செய்து வருகின்றன.ஆனால், இவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் அனுமதியின்றியும், தரமற்ற எம்- - சாண்ட் உற்பத்தியும் செய்து வருகின்றன. எம்- - சாண்ட் தரத்தை ஆய்வு செய்து, தரச்சான்றிதழ் வழங்க வேண்டிய பொதுப்பணித்துறை, இந்த விவகாரத்தில் வேடிக்கை பார்த்து வருவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அனுமதியின்றி செயல்படும் கிரஷர்களை மூடவும், அவற்றின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், எந்த நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 162 எம் - -சாண்ட் உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருவதாகவும், அதில், 12 எம் - -சாண்ட் நிறுவனங்கள் மட்டுமே அரசு அனுமதியுடன் இயங்கி வருவதாகவும், மீதமுள்ள 150 கிரஷர்கள் அனுமதியின்றி செயல்படுவதாக, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.இந்நிலையில், மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், இதுதொடர்பாக காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்திலும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித்துறை உள்ளிட்ட இடங்களிலும், அனுமதியற்ற கிரஷர்கள் மீது புகார் அளித்துள்ளார்.ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை என புகார் தெரிவிக்கிறார். தரமற்ற எம் - -சாண்ட் தயாரிக்கப்படுவதால், பல்வேறு கட்டடங்கள் பாதிக்கும் சூழல் உள்ளது. அரசு கட்டடங்களும், பொதுமக்களின் வீடுகளும் இந்த எம்- - சாண்டில் கட்டப்பட்டு வருகின்றன. கழிவுகள் கலந்த எம்- - சாண்ட் பயன்படுத்தி கட்டப்படும் வீடுகள் சேதமாகும் அபாயம் உள்ளது.இதுகுறித்து, மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் கூறியதாவது:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 162 கிரஷர்களில், 12 நிறுவனங்களே அனுமதி பெற்றுள்ளன. தரமற்ற முறையில், எம் - -சாண்ட் உற்பத்தி செய்யும் கிரஷர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வலியுறுத்தி வருகிறோம்.அனுமதியின்றி செயல்படும் கிரஷர்கள் மீது எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுப்பதில்லை. அதேபோல், கைகளால் எழுதப்படும் ரசீதுகள் வைத்து, பல முறைகேடு நடக்கின்றன. அவற்றை இதுவரை கனிமவளத் துறையினர் மாற்றிக் கொள்ளவில்லை. மதுராந்தகத்தில் நேற்று முன்தினம் கூட லாரியை பிடித்துள்ளனர். ரசீது கொடுத்து அனுப்பிய குவாரி உரிமையாளர் மீது ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை.சரியான சட்ட திட்டங்கள் இங்கு இல்லை. தரமற்ற பொருட்களால் கட்டட பாதிப்பு ஏற்பட்டால், யார் பொறுப்பேற்பர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் அனுமதியற்ற கிரஷர்களை உடனடியாக மூட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ