1.69 லட்சம் மாடுகளுக்கு வரும் 1 முதல் கோமாரி தடுப்பூசி
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1.69 லட்சம் மாடுகளுக்கு, கோமாரி தடுப்பூசி செலுத்தும் முகாம், வரும் 1ம் தேதி முதல், செலுத்தப்பட உள்ளதாக, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:கோமாரி நோய் காரணமாக, கால்நடைகள் இறப்பு மட்டுமல்லாமல், பொருளாதார இழப்பும் விவசாயிகளுக்கு ஏற்படுகின்றன.மேலும், பால் உற்பத்தி கடுமையாக குறைதல், மலட்டுத்தன்மை ஏற்படுதல், கருச்சிதைவு, எடை குறைதல் போன்ற பாதிப்புகள் மாடுகளுக்கு ஏற்படுகின்றன.பெரும்பான்மையான கால்நடை உரிமையாளர்கள், சிறு, குறு விவசாயிகளாக உள்ளதால், கால்நடை இழப்பால் ஏற்படும் பொருளாதார இழப்பை தாங்க முடியாத நிலையில் உள்ளனர்.எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போட வேண்டும். இந்நோய், மாடுகளுக்கு குளிர்காலத்தில் ஏற்படும். மேலும், நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள் மற்றும் சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு போன்ற காரணங்களால் பரவுகிறது.எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 1.69 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், 7ம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி, ஜூலை 1ம் தேதி முதல், 31ம் தேதி வரை நடக்க உள்ளது.எனவே, கால்நடை உரிமையாளர்கள், தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் நான்கு மாதத்திற்கு மேற்பட்ட கன்றுகளுக்கு, கோமாரி தடுப்பூசியை தவறாமல் போட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.