பெரும்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் 36 வயது நபர் வெட்டிக்கொலை
பெரும்பாக்கம்:சமையல் 'காஸ்' சிலிண்டர் டெலிவரி ஊழியர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.பெரும்பாக்கம், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பேருந்து நிறுத்தத்தில், ௩௬ வயது மதிக்கத்தக்க நபர் பலத்த வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார்.நேற்று காலை 6:00 மணியளவில், நடைபயிற்சி சென்றவர், பெரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடலை மீட்ட போலீசார், குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவரின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டி.வி.எஸ்., - எக்ஸ்.எல்., மொபெட்டை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.இதில் தெரிய வந்ததாவது:பெரும்பாக்கம், எழில் நகரைச் சேர்ந்தவர் பழனிசாமி, 36. இவர், ஓ.எம்.ஆர்., சாலையில் உள்ள 'காஸ்' ஏஜன்சியில் சிலிண்டர் டெலிவரி ஊழியராக பணி செய்து வந்துள்ளார். இவருக்கு மனைவி வீரலட்சுமி மற்றும் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, சில வாரங்களுக்கு முன் 'கணவருடன் வாழ விருப்பமில்லை' என, கண்ணகிநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், வீரலட்சுமி புகார் கொடுத்து உள்ளார்.நேற்று முன்தினம் இரவு தம்பதி இடையே, மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. பழனிசாமி வீரலட்சுமியை முகத்தில் தாக்கியதில், அவரது முகத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, நள்ளிரவு வீடு திரும்பியுள்ளார்.அப்போது, பழனிசாமி மது போதையில் வீட்டில் துாங்கி கொண்டிருந்துள்ளார். இந்த நிலையில், நள்ளிரவு 1:30 மணிக்கு, தன் வாகனத்தில், வீட்டை விட்டு வெளியில் சென்ற பழனிசாமி, கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.போலீசார் அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் விசாரிக்கின்றனர்.