பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட 40 தொழிலாளர்களுக்கு சிகிச்சை
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில், 'ஜெடெக்ட் இந்தியா' என்ற கார் ஸ்டீரிங் வீல் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட, 40 தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். ஸ்ரீபெரும்புதுார் அருகே, மாம்பாக்கத்தில், 'ஜெடெக்ட் இந்தியா' என்ற கார் ஸ்டீரிங் வீல் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று மதியம், தொழிற்சாலை கேன்டீனில் தொழிலாளர்கள் 40 பேர் உணவு சாப்பிட்டனர். அப்போது, உணவில் பல்லி இருந்தது தெரிந்தது. இதையடுத்து, தொழிலாளர்கள், உடனடியாக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டனர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதித்து சிகிச்சை அளித்தனர். தொழிலாளர்களுக்கு பாதிப்பு எதும் இல்லாததை அடுத்து, மீண்டும் அவர்கள் தொழிற்சாலைக்கு சென்றனர். இது குறித்து ஸ்ரீபெரும்புதுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.