தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 572 வழக்குகள் மீது தீர்வு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 572 வழக்குகள் மீது தீர்வு காணப்பட்டன.காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி செம்மல், தேசிய மக்கள் நீதிமன்றம் நிகழ்ச்சியை நேற்று துவக்கி வைத்தார்.இதில், கூடுதல் மாவட்ட நீதிபதி மோகனகுமாரி, காஞ்சிபுரம் தொழிலாளர் நல நீதிமன்ற நீதிபதி சுஜாதாஆகியோர் முன்னிலை வகித்தனர்.காஞ்சிபுரம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும் முதன்மை சார்பு நீதிபதியுமான அருண்சபாபதி, காஞ்சி புரம் கூடுதல் சார்பு நீதிபதி திருமால், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சந்தியாதேவி, நீதித்துறை நடுவர் - 2 நவீன் துரை பாபு, வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சுப்பிரமணி, லாயர்ஸ் சங்க தலைவர் திருப்பதி முரளி கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.இதில், மோட்டார் வாகன விபத்து வழக்கு, அசல் வழக்கு, வங்கி வாராக்கடன், குடும்ப நலம், தொழிலாளர் நல வழக்குகள் என மொத்தம் 572 வழக்குகளுக்கு தீர்வு வழங்கப்பட்டு, 8.12 கோடி ரூபாய் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டது. இதில், 55 வங்கி வழக்குகளுக்கு, 31.5 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது.