உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பருவமழை முன்பாகவே நிரம்பிய 8 ஏரிகள்

பருவமழை முன்பாகவே நிரம்பிய 8 ஏரிகள்

காஞ்சிபுரம்:பருவமழை துவங்கும் முன்பாகவே, உத்திரமேரூர், தாமல் உள்ளிட்ட எட்டு ஏரிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிரம்பி வழிகின்றன. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில், பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வட தமிழகத்தில் விட்டு விட்டு மழை பெய்யும் நிலையில், நீர்நிலைகள் மெல்ல நிரம்ப துவங்கி உள்ளன. திருவண்ணாமலை, வேலுார், திருப்பத்துார் மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக, பாலாறு, செய்யாறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், அருகில் உள்ள ஏரிகளை நிரப்ப தண்ணீர் கிடைக்கும். அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான, தாமல் ஏரி முழுமையாக நிரம்பி உ பரி நீர் வடிகிறது. இதுமட்டுமல்லாமல், உத்திரமேரூர் பெரிய ஏரி, தாமல் மாந்தாங்கல் ஏரி, தாமல் சக்கரவர்த்தி தாங்கல் ஏரி, தைப்பாக்கம் ஏரி, கூரம் சித்தேரி, கோவிந்தவாடி சித்தேரி, திருப்புலிவனம் ஏரி ஆகிய ஏரிகள் முழுமையாக நிரம்பிவிட்டதாக, நீர்வளத்துறை தெரிவிக்கிறது. இந்த ஏரிகள் கடந்த வாரம் வரை வறண்டு கிடந்த நிலையில், மழை பெய்ய துவங்கிய உடன் நிரம்பி உள்ளது. பருவமழை துவங்கும் முன்பாகவே எட்டு ஏரிகள் நிரம்பியதாவும், மற்ற ஏரிகளும் மெல்ல நிரம்புவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில், எட்டு ஏரிகள் முழுமையாகவும், 31 ஏரிகள் 75 சதவீதமும், 108 ஏரிகள் 50 சதவீதமும், 153 ஏரிகள் 25 சதவீதமும், 81 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் குறைவான நீர் இருப்பை கொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !