காப்பர், கேபிள் ஒயர் திருட்டில் ஈடுபட்ட 9 பேருக்கு காப்பு
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், சிங்காடிவாக்கம் கிராமத்தில், மின்சாதனப் பொருட்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்குகிறது. இந்த தொழிற்சாலையில், சில தினங்களுக்கு முன், 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பர் ஒயர் திருடு போனது குறித்து, அத்தொழிற்சாலை நிர்வாகத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.அதன்படி, வாலாஜாபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பாக போலீசார் அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' காட்சி பதிவுகளை ஆராய்ந்தனர். அப்போது, அத்தொழிற்சாலையின் சுற்றுச்சுவர் மீது ஏறி, காப்பர் ஒயர் அடங்கிய பெட்டிகளை மர்ம நபர்கள் திருடி செல்வதை கண்டறிந்தனர்.தொடர் விசாரணையில், அந்த நபர்கள், சிங்காடிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மதன் 40, பிரசாந்த 39 மற்றும் செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஏகாம்பரம் 48, ராஜேஷ் 40 மற்றும் விக்னேஷ், 39, என்பது தெரியவந்தது. அவர்களை வாலாஜாபாத் போலீசார் கைது செய்தனர்.மற்றொரு திருட்டு;இதேபோன்று, சிங்காடிவாக்கத்தில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இத்தொழிற்சாலையில், 50,000 ரூபாய் மதிப்பிலான கேபிள் ஒயர்கள் திருடு போனது குறித்த புகாரின்படி, வாலாஜாபாத் போலீசார் விசாரித்து வந்தனர்.விசாரணையில், கேபிள் ஒயர் திருட்டில் ஈடுபட்டதாக அதே பகுதியைச் சேர்ந்த மதுரபாண்டி 35, கணபதி 30, பாண்டியன் 38 மற்றும் தென்னேரி கிராமத்தைச் சேர்ந்த மூவரசு 40 ஆகிய நான்கு பேரை வாலாஜாபாத் போலீசார் கைது செய்தனர்.