அழிசூர் ஏரியில் உடைந்த கலங்கலில் மண் மூட்டைகளால் தடுப்பு
உத்திரமேரூர்: அழிசூர் ஏரியில், உடைந்த கலங்கல் பகுதியில் தண்ணீர் வெளியேறுவதை தடுக்க, நீர்வளத் துறையினர் விவசாயிகளை கொண்டு, மண் மூட்டைகளை நேற்று அடுக்கினர். உத்திரமேரூர் தாலுகா, அழிசூர் கிராமத்தில் 180 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. நீர்வளத்துறைக்கு சொந்தமான, இந்த ஏரி தண்ணீரை கொண்டு, 250 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நீண்ட ஆண்டுகளாக இந்த ஏரி கலங்கல், பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து இருந்தது. கடந்த, 'பெஞ்சல்' புயலின் போது ஏற்பட்ட மழையினால் ஏரி முழுதுமாக நிரம்பியது. அப்போது, சேதமடைந்து இருந்த கலங்கலின் ஒரு பகுதி உடைந்தது. இதையடுத்து, ஓராண்டாக உடைந்த கலங்கலை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், 10 நாட்களுக்கு முன் பெய்த மழையினால், இளநகர் மற்றும் அனுமந்தண்டலம் ஏரிகள் முழுதுமாக நிரம்பியது. இந்த ஏரிகளின் உபரி நீரானது வரத்து கால்வாய் மூலமாக, அழிசூர் ஏரியில் சேகரமாகி வருகிறது. தற்போது, அழிசூர் ஏரியில் 75 சதவீதம் தண்ணீர் நிரம்பி உள்ளதால், உடைந்த கலங்கல் வழியே தண்ணீர் வெளியேறி வருகிறது. தகவலறிந்த, உத்திர மேரூர் நீர்வளத்துறையினர் தண்ணீர் வீணாக வெளியேறுவதை தடுக்க, விவசாயிகளைக் கொண்டு உடைந்த கலங்கல் பகுதியில், மண் மூட்டைகளை அடுக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.