அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா
காஞ்சிபுரம்:ஆடி மாத நான்காவது வெள்ளிகிழமையான நேற்று, பல்வேறு அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா நடந்தது. காஞ்சிபுரம் மாநகராட்சி, 27வது வார்டு கன்னிகாபுரத்தில் உள்ள கன்னியம்மன், வேலாத்தம்மன் கோவிலில், ஆடி திருவிழாவையொட்டி, நேற்று காலை 7:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 9:00 மணிக்கு கங்கை நீர் திரட்டும் நிகழ்வும் நடந்தது. தீமிதிக்கும் பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்வும், மதியம் 1:00 மணிக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் சேவை உத்சவம் நடந்தது. இதில், மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய கன்னியம்மன், வேலாத்தம்மன், மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அன்னை ரேணுகாம்பாள் காஞ்சிபுரம் செங்குந்தர் பூவரசந்தோப்பு அன்னை ரேணுகாம்பாள் கோவிலில், 50வது ஆடி திருவிழாவையொட்டி, நேற்று இரவு 7:00 மணிக்கு, மூலவர் அன்னை ரேணுகாம்பாள், விஷ்ணு துர்க்கை அலங்காரத்தில் அருள்பாலித்தார். சத்ய சாரா நாட்டியாலயாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. சந்தைவெளி அம்மன் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில் உள்ள சந்தைவெளி அம்மன் கோவிலில், ஆடி திருவிழாவின் 23வது நாளான நேற்று காலை, மூலவர் அம்மனுக்கு, சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. மாலை, பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படையலிட்டனர். இரவு 7:00 மணிக்கு, சந்தைவெளி அம்மன் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார்.