குமரகோட்டத்தில் ஆடி கிருத்திகை விழா
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆடி கிருத்திகையையொட்டி, நேற்று மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி, மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு நேற்று காலை பால், தேன், தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, பஞ்சாமிர்தம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது.பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கோவிலில் உள்ள நவக்கிரஹ சன்னிதி அருகில், உற்சவர் முத்துகுமார சுவாமிக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்து பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். ஆடி கிருத்திகையையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், மூலவர் சன்னிதியில் இருந்து பக்தர்கள் வெளியே வரும் வழியாக, பிற பக்தர்கள் குறுக்கு வழியில் உள்ளே செல்வதை தடுக்கும் வகையில், தடுப்பு அமைக்கப்பட்டு கோவில் பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இதனால், விசேஷ நாட்களில் வழக்கமாக ஏற்படும் கூட்ட நெரிசல் முற்றிலும் தவிர்க்கப்பட்டது. இதே நடைமுறையை கோவில் நிர்வாகம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.