பாதியில் விடப்பட்ட கால்வாய் பணி மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
புத்தேரி: காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி ஊராட்சி பிரதான சாலையோரம், கான்கிரீட் வடிகால்வாய் கட்டுமானப் பணி பாதியில் விடப்பட்டுள்ளதால், அப்பகுதியில் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி ஊராட்சி, பிரதான சாலையோரம் மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில் மண் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயில் அடிக்கடி செடிகள் வளர்ந்து கால்வாய் என்பதற்கான அடையாளமே தெரியாமல் மாறிவிடுவதால், பருவமழை காலங்களில் இப்பகுதியில் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில், இரு ஆண்டுகளுக்கு முன், கான்கிரீட் கால்வாய் அமைக்கப்பட்டது. கால்வாய் முழு நீளத்திற்கும் அமைக்காமல் பாதியில் விடப் பட்டுள்ளது. இதனால், இப்பகுதியில் பலத்த மழை பெய்தால், கால்வாய் மூலம் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் புகும் நிலை உள்ளது. எனவே, மீதமுள்ள மண் கால்வாய்க்கு கான்கிரீட் கால்வாய் அமைக்க வேண்டும் என, புத்தேரியினர் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து புத்தேரி ஊராட்சி தலைவர் ஜார்ஜ் கூறியதாவது: புத்தேரி ஊராட்சி பிரதான சாலையோரம் உள்ள மண் கால்வாய் மொத்தம் 536 மீட்டர் நீளம் கொண்டது. முதற்கட்டமாக 150 மீட்டர் நீளத்திற்கு கான்கிரீட் கால்வாய் கட்டப் பட்டுள்ளது. மீதமுள்ள 386 மீட்டர் நீளத்திற்கு கான்கிரீட் கால்வாய் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய, காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது. நிதி வந்ததும் மீதமுள்ள கான்கிரீட் கால்வாய் பணி முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.