ஓராண்டிற்கு முன் தோண்டிய பள்ளம் மூடாததால் விபத்து அபாயம்
வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சி, 12வது வார்டு, பஜார் அடுத்து பி.கே., செட்டித்தெரு உள்ளது. இத்தெருவின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.இக்கால்வாய் வழியாக வெளியேறக்கூடிய கழிவுநீர், வாலாஜாபாத் பாலாற்றில் இருந்து, முனிசிப் நாராயணசாமி தெரு வழியாக வெள்ளப்பாக்கம் ஏரிக்கு செல்லும் கால்வாயில் சென்றடைய வேண்டும்.இந்நிலையில், முறையான பராமரிப்பின்மை காரணமாக இக்கால்வாயில் ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டு தண்ணீர் தேக்கமாகி காணப்படுகின்றன.இதனிடையே, கடந்த ஆண்டு இத்தெருவில் உள்ள 'சக்தி மிகுந்த சாலை வினாயகர்' கோவில் எதிரே தரைப்பாலம் வாயிலாக கழிவுநீர் வெளியேறாததால் சாலையில் வழிந்தது.அச்சமயம், சீரமைப்பு பணிக்காக சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டது. இதையடுத்து, தற்போது வரை அப்பள்ளம் துார்க்காமல், பணியும் முழுமையாக மேற்கொள்ளாமல் உள்ளது.இதனால், அச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகும் அபாயம் உள்ளது.குறிப்பாக, இரவு நேரங்களில், பஜார் வீதியில் இருந்து வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் இச்சாலையின் பள்ளமான பகுதியை அச்சத்துடன் கடக்கும் நிலை இருந்து வருகிறது.எனவே, வாலாஜாபாத், பி.கே., செட்டித் தெருவில் ஓராண்டாக ஆபத்தான நிலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.