மின்கம்பி உரசும் மரக்கிளைகளால் சின்ன காஞ்சியில் விபத்து அபாயம்
காஞ்சிபுரம், சின்ன காஞ்சிபுரம், விஷ்ணு நகர் பூங்காவை ஒட்டியுள்ள தெருவில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க, மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதில், சாலையோரம் இரு இடங்களில் உள்ள வேப்ப மரத்தின் கிளைகள், மின் கம்பிகளை உரசும் வகையில் வளர்ந்துள்ளன. காற்று அடிக்கையில், மரக்கிளைகள் மின்கம்பியில் ஒன்றுடன் ஒன்று உரசும்போது, அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிப்பு ஏற்படுவதாக, அப்பகுதியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.மேலும், மழைக்காலங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்து மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதற்குள், விஷ்ணு நகரில் மின்கம்பிகளை உரசும் வகையில் வளர்ந்துள்ள வேப்ப மரத்தின் கிளைகளை அகற்ற, மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.