அரசு மருத்துவமனைகளில் 40 கர்ப்பிணியர் தங்கவைப்பு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், சுகாதாரத் துறையின்கீழ், 28 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த சுகாதார நிலையங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் வசிப்போரில், அக்டோபர் மாதம் மட்டும் 91 கர்ப்பிணியருக்கு பிரசவம் நடைபெற உள்ளது.இவர்கள் வசிக்கும் பகுதிகள், தாழ்வாக இருந்தால், கர்ப்பிணியரை முன்கூட்டியே அரசு மருத்துவமனைகளில் தங்க வைத்து பராமரிக்க வேண்டும் என, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இம்மாதம் பிரசவத்துக்கு தயாராக உள்ள 91 கர்ப்பிணிகளில், 40 கர்ப்பிணியரை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு, சுகாதாரத் துறையினர் வீட்டிலிருந்து அழைத்து சென்று தங்க வைத்துள்ளனர்.குன்றத்துாரில் 5, எழிச்சூரில் 2 , மானாமதியில் 2, மதுரமங்கலத்தில் 2 உட்பட, 40 கர்ப்பிணியர் அரசு மருத்துவமனைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.