விதிகளை மீறி சாலையோர மரங்களில் விளம்பர பேனர்கள் வைப்பு
உத்திரமேரூர்: மானாம்பதியில் விதிகளை மீறி, சாலையோர மரங்களில் விளம்பர பேனர்கள் வைப்பவர்கள்மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பசுமை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தில், புக்கத்துறை நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி சுற்றுவட்டார கிராமத்தினர் பல்வேறு பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர். அவ்வாறு செல்லும் வாகன ஓட்டிகளை வெயிலின் தாக்கத்திலிருந்து காக்கவும், பசுமையான சூழலை ஏற்படுத்தவும், நெடுஞ்சாலைத் துறை சார்பில், 100க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. பொதுவாக நெடுஞ்சாலையோரங்களில் உள்ள மரங்களில், பிளக்ஸ் பேனர் வைக்க அனுமதியில்லை. ஆனால், மானாம்பதியில் இரவு நேரங்களில் விதிமுறைகளை மீறி, நெடுஞ்சாலையோரத்தில் உள்ள மரங்களில், சமீப நாட்களாக பள்ளி, ரியல் எஸ்டேட், ஜவுளிக்கடை விளம்பரங்கள் அடங்கிய டிஜிட்டல் பேனர்களை, ஆணி அடித்து வைத்து வருகின்றனர். மரங்களில் ஆணி அடிப்பதால் மரம் பட்டுப்போவதோடு, மரத்தில் வாழும் அணில், குரங்குகள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு காயமும் ஏற்பட்டு வருகிறது. எனவே, நெடுஞ்சாலையோர மரங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைப்பதை தடுக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, பசுமை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.