உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தெரு விளக்கு கம்பங்களில் தொங்கும் மின் ஒயர்களால் மின்சாரம் பாய்ந்து 4 மாடுகள் இறந்ததாக குற்றச்சாட்டு

தெரு விளக்கு கம்பங்களில் தொங்கும் மின் ஒயர்களால் மின்சாரம் பாய்ந்து 4 மாடுகள் இறந்ததாக குற்றச்சாட்டு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள மின் விளக்கு கம்பங்களில் இருந்து வெளிப்படும் மின் ஒயர்களில் இருந்து மின்சாரம் பாய்ந்து இதுவரை நான்கு மாடுகள் இறந்துள்ளன. மேலும், ஆபத்து ஏற்படுத்தும் வகையில் மின் ஒயர்கள் தொங்குவதாக மக்கள் புகார் தெரிவித்தனர். காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளிலும், 13,000க்கும் அதிகமான மின் விளக்கு கம்பங்கள் உள்ளன. இந்த மின் விளக்கு கம்பங்களில், 12 கோடி ரூபாய்க்கு மேலாக செலவிட்டு புதிய எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மின் விளக்குகள் பொருத்துவது மட்டுமல்லாமல், அவற்றை பராமரிக்கும் பொறுப்பையும், தனியார் நிறுவனத்திடம் மாநகராட்சி நிர்வாகம் ஒப்படைத்துள்ளது. ஆனால், மின் விளக்குகளையும், மின் விளக்கு கம்பங்களையும் பராமரிக்கும் பணி முறையாக நடக்காததால், மின் கம்பங்களில் இருந்து வெளிப்படும் மின் ஒயர்களால், மக்கள் மீது மின்சாரம் பாயும் நிலை உள்ளது. மாநகராட்சியில் உள்ள மின் விளக்குகளை பராமரிக்க, ஒவ்வொரு ஆண்டும் பல லட்ச ரூபாய் நிதியை, தனியார் நிறுவனத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் வழங்க வேண்டியுள்ளது. ஆனால், பராமரிப்பு பணி படுமோசமாக இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். மின் விளக்கு கம்பங்களின் அடிப்பகுதியில் உள்ள துவாரத்தில் இருந்து ஏராளமான மின் ஒயர்கள் வெளிப்பட்டு இருப்பதால், அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து, இதுவரை நான்கு மாடுகள் இறந்திருப்பதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மின் ஒயர்கள் ஆபத்தான நிலையில் வெளியே உள்ளதாக கலெக்டர் அலுவலகத்திலும், மாநகராட்சி அலுவலகத்திலும் புகாராக தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்கின்றனர். மாடுகள் இறந்தது போல, மக்களுக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது. மின் கம்பங்களில் இருந்து வெளிப்பட்டு, ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்களை கண்டறிந்து அவற்றை தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலமாக சரி செய்ய வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மின் கம்பம் பராமரிப்பு இல்லை என நாங்கள் புகார் கொடுத்தால், அவற்றை காவல் நிலையத்திற்கு அனுப்பி விடுகின்றனர். இதுவரை மின்சாரம் பாய்ந்து நான்கு மாடுகள் இறந்துள்ளன. மின் விளக்கு கம்பங்களின் நிலை படுமோசமாக உள்ளது. அவற்றை சரி செய்ய வேண்டும். - கா.பெத்ராஜ், சமூக ஆர்வலர், காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை