நிதி நிறுவன ஊழியருக்கு வெட்டு கடனை செலுத்த கூறியதால் ஆத்திரம்
காஞ்சிபுரம், காஞ்சிபுரத்தில், வீட்டு கடன் மாத தவணை முறையாக திருப்பி செலுத்த கூறியதால், தனியார் நிதி நிறுவன ஊழியரை, கடன் பெற்ற நபர் வெட்டியதில், படுகாயம்அடைந்தார். காஞ்சிபுரம் நகரில் உள்ள வள்ளல் பச்சையப்பன் தெருவில், 'பிராமல் பைனான்ஸ்' என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில், வீடு கட்டுவதற்காக, புத்தேரி பகுதியைச் சேர்ந்த குணா, 60, என்பவர், 2018ல் 12 லட்சம் ரூபாய் வீட்டு கடனாக வாங்கியிருந்தார். பின் தனியார் நிதி நிறுவனத்திற்கு குணா முறையாக மாத தவணையை செலுத்தாமல் இருந்துள்ளார். இதனால், நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் அடிக்கடி குணா வீட்டிற்கு சென்று பணம் குறித்து கேட்டுள்ளனர். இதனால், அதிருப்தியடைந்த குணா, நேற்று காலை, நிதி நிறுவனத்திற்கு சென்று வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது, நிர்வாக பிரிவு ஊழியரான வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த குணநிதி, 36. என்பவரை, கத்தியால் கழுத்தின் பின்பக்கம், குணா வெட்டினார். இதில், பலத்த காயம் ஏற்பட்ட குணநிதி, முதலுதவிக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின், தீவிர சிகிச்சைக்காக வேலுாரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விஷ்ணுகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, குணாவை கைது செய்தனர்.