பிளாஸ்டிக் பயன்படுத்தாத வணிகர்கள் விருது பெற விண்ணப்பம் வரவேற்பு
காஞ்சிபுரம்:பிளாஸ்டிக் பயன்படுத்தாத உணவு வணிகர்களுக்கு, உணவு பாதுகாப்புத் துறை வழங்கும் விருதை பெற விண்ணப்பிக்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார். கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மறுசுழற்சி தன்மையுள்ள மட்கும் பொருட்களை உபயோகப்படுத்தி உணவுப் பொருட்களை விநியோகிக்கும், பொட்டலமிடுபவர்களை ஊக்குவிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அந்நிறுவனங்களை கண்டறிந்து தமிழக அரசு விருது வழங்கவுள்ளது. மிகச்சிறந்த பெரிய வகை உணவு வணிகர்களுக்கு, அதாவது ஒரு ஆண்டுக்கு விற்பனை கொள்முதல் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட உணவு வணிகர்களுக்கு 1 லட்சம் ரூபாய் தொகையுடன்கூடிய விருது வழங்கப்படும். தெருவோர வணிகர்கள் உள்ளிட்ட சிறு வணிகர்களுக்கு 50,000 ரூபாய் தொகையுடன்கூடிய விருதும் வழங்கப்பட உள்ளது. அதற்கு விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்டு மாத இறுதிக்குள் காஞ்சிபுரம் உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பங்கள், கலெக்டர் கலைச்செல்வி தலைமையிலான தேர்வு குழுவினர் பரிசீலனை செய்வதுடன் மாவட்ட அளவிலான தேர்வு குழு சம்பந்தப்பட்ட உணவகங்களை கள ஆய்வு செய்து, பரிந்துரையை சமர்ப்பிக்கும். உணவு வணிகர்கள், தமிழக அரசின் உணவு பாதுகாப்புத் துறையின் விருதையும் வெல்ல முயற்சி மேற்கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வளாகத்தில், சப் - கலெக்டர் அலுவலக கட்டடத்தின் முதல் தளத்தில் உள்ள மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.