உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் தொல்லியல் சின்னங்கள் பாழாகும் அபாயம்! கோவில்களை சுற்றி விதிமீறல் கட்டடங்கள் அதிகரிப்பு

காஞ்சியில் தொல்லியல் சின்னங்கள் பாழாகும் அபாயம்! கோவில்களை சுற்றி விதிமீறல் கட்டடங்கள் அதிகரிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள, 7 தொல்லியல் துறை கோவில்களை சுற்றிலும், தொல்லியல் துறை விதிகளை மீறி பல கட்டடங்கள் உயரமாக கட்டப்படுகின்றன. விதிமீறல் கட்டடங்களை, மாநகராட்சி நிர்வாகத்தின் நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், தொல்லியல் சின்னங்கள் பாதிக்கும் சூழல் உள்ளது. காஞ்சிபுரம் பல்லவ அரசர்கள், விஜயநகர அரசர்களால் ஆளப்பட்ட தொன்மையான நகரம். இங்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட கோவில்கள் இன்றைக்கும் கம்பீரமாக காட்சியளிக்கின்றன. பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட, 1,000 ஆண்டுகள் பழமையான கோவில்களை, மத்திய அரசின் தொல்லியல் துறையினர், பாதுகாத்து வருகின்றனர். அதன்படி, காஞ்சிபுரம் நகரில், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கைலாசநாதர் கோவில், வைகுண்ட பெருமாள் கோவில், மாதங்கீஸ்வரர் கோவில், ஜூரகேஸ்வரர் கோவில், முத்தீஸ்வரர் கோவில், ஐராவதீஸ்வரர் கோவில், பிறவாதீஸ்வரர் கோவில் என ஏழு கோவில்கள் உள்ளன. இந்த ஏழு கோவில்களை சுற்றிலும், 100 மீட்டருக்குள் எந்தவித கட்டுமானங்களையும் மேற்கொள்ள கூடாது என தொல்லியல் துறை சட்ட விதிகள் உள்ளன. மேலும், 100 மீட்டருக்கு சற்று தொலைவில் உள்ள இடங்களில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றால், தொல்லியல் துறையிடம் தடையில்லா சான்று பெற வேண்டும். 100 மீட்டருக்குள் உள்ள கட்டடங்கள், 8 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்ட கூடாது. ஆனால், மூன்று அடுக்குமாடி வரை கட்டியுள்ளனர். அவ்வாறு எந்த வித தடையில்லா சான்றும் பெறாமல், 100 மீட்டருக்கு உள்ளேயும் பல கட்டடங்களை தனியார் பலர் கட்டி வருகின்றனர். தனியார் மட்டுமல்லாமல், அரசு கட்டடங்களே தொல்லியல் துறையின் சட்டங்களை மீறி கட்டுமானங்களை மேற்கொள்வதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சன்னிதி தெருவில் உள்ள ஜூரகேஸ்வரர் கோவில் எதிரேயுள்ள நேரு கிளை நுாலகம், கைலாசநாதர் கோவில் அருகே கட்டப்பட்டுள்ள கழிப்பிடம் என, அரசு கட்டடங்களே விதிமீறி எந்தவித அனுமதியும் வாங்காமல் கட்டப்பட்டுள்ளன என, தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதுபோல், தனியார் கட்டடங்கள் பலவற்றுக்கு, தொல்லியல் துறையினர் நோட்டீஸ் வழங்கியும், கட்டுமான பணிகள் மேற்கொள்கின்றனர். கட்டுமான பணிகளை நி றுத்தக்கோரி, மாநகராட்சி நிர்வாகம், போலீஸ், வருவாய் துறைக்கு தொல்லியல் துறை கடிதம் கொடுக்கின்றனர். ஆனால், மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் கட்டுமானங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதா க புகார் எழுந்துள்ளது. கைலாசநாதர் கோவில் மட்டுமல்லாமல், ஏழு தொல்லியல் துறை கோவில்களை சுற்றிலும் மூன்று அடுக்கு கொண்ட கட்டடங்கள் பல உள்ளன. வீட்டு உரிமையாளர்களிடம் நோட்டீஸ் கொடுத்தாலும், அவற்றை வீட்டு உரிமையாளர்கள் மதிப்பதில்லை என, தொல்லியல் துறையினர் புலம்புகின்றனர். விதிமீறல் கட்டுமா னங்களை இடிக்கவும், புதிதாக எந்த கட்டடத்தையும் கட்டவிடாமல், அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். கோவில் அருகே ஆழமான பள்ளங்களை தோண்டுவதும், அதிர்வுகளுடன் கூடிய கட்டுமான பணிகளை மேற்கொள்வதை தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: அனுமதியற்ற கட்டுமானங்களை நிறுத்த நாங்கள் மாநகராட்சிக்கு கடிதம் வழங்கினாலும், அவற்றை நிறுத்துவதாக இல்லை. மாநகராட்சியில் உள்ள நகரமைப்பு பிரிவு அதிகாரிகள், தொல்லியல் துறை கோவில் சுற்றியுள்ள கட்டுமானங்களை கண்டும் காணாமல் உள்ளனர். பிற துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு இருந்தால் தான், தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர். தனி கவனம் செலுத்த வேண்டும் காஞ்சிபுரத்தில் உள்ள பல்லவர்கள் கட்டிய, 7 கோவில்களையும், பாதுகாக்க கலெக்டர் தலைமையில் விரிவான ஆய்வு கூட்டங்களை நடத்த வேண்டும். விதிமீறல் கட்டடங்களை இடிக்க, மாநகராட்சிக்கு உரிய வழிகாட்டுதல்களை கலெக்டர் தெரிவிக்க வேண்டும். விதிமீறல் கட்டடங்களுக்கு நோட்டீஸ் வழங்கி இடிக்க வேண்டிய பணிகளை, மாநகராட்சி மேற்கொள்வதை, கலெக்டர் உறுதி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ