அல்லாபாத் ஏரி மான்களை மீட்டு வனப்பகுதியில் விட ஏற்பாடு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில், திருக்காலிமேடு செல்லும் வழியில், அல்லாபாத் ஏரி, 110 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மாநகராட்சி எல்லையில் அமைந்துள்ள மிகப்பெரிய நீர்நிலையான இந்த ஏரியின் நிலை படுமோசமாக உள்ளது. ஏரிக்கரைகள் சேதமடைந்து, குப்பை கொட்டியும் பராமரிப்பு இன்றி இருந்தது.இந்த ஏரியை சீரமைக்க வேண்டும் என, நகரவாசிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி, தனியார் நிறுவனம், தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து, இந்த ஏரியை சீரமைக்க முடிவு செய்தது.தனியார் நிறுவனம் தன் தொழிற்சாலை சார்பில், பொக்லைன் வாகனத்தை வழங்கியுள்ளது. இதற்கான டீசல், பராமரிப்பு மற்றும் இதர செலவினங்களை மாநகராட்சி நிர்வாகம் கவனிக்கும். தொண்டு நிறுவனமும் இந்த ஏரி சீரமைப்பில் தன் பங்களிப்பை செய்ய உள்ளது.இந்த ஏரி சீரமைப்பு பணிகளின் துவக்க நிகழ்ச்சி, திருக்காலிமேட்டில் கடந்த 27ல் நடந்தது. ஏரி சீரமைப்பு பணியை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி துவக்கி வைத்தார்.ஏரிக்குள் 20க்குள் மேற்பட்ட புள்ளி மான்கள் உலவுகின்றன. ஏரிக்குள் உள்ள புதர்களுக்கு இடையே பல ஆண்டுகளாக வாழும் மான்கள், அடிக்கடி கரை பகுதிக்கு வருவதுண்டு.மான்கள் வேட்டையாட வாய்ப்பு இருப்பதாக, அப்பகுதியினர் அச்சம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், பொக்லைன் வாயிலாக, ஏரி சீரமைப்பு பணி துவங்கியுள்ளன.இதனால், ஏரிக்குள் உள்ள மான்களின் நிலை பற்றி நகரவாசிகள் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு, வனத்துறை சார்பில், இந்த மான்களை பிடிக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, மாவட்ட வன அலுவலர் ரவிமீனா கூறுகையில், ''அல்லாபாத் ஏரிக்குள் உள்ள அனைத்து மான்களையும் நாங்கள் பிடிக்க உள்ளோம். அவற்றை பாதுகாப்பாக பிடித்து, ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் போன்ற இடங்களில் உள்ள காப்பு காடுகளில் விடுவோம். மான்களை பிடிப்பதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்கிறோம்,'' என்றார்.