காஞ்சியில் ரூ.40 கோடி கான்கிரீட் கால்வாய் திட்டத்தில்...அட்டூழியம்!: கழிவுநீர் விடுவதற்கு தடுப்புச்சுவரில் அடுத்தடுத்து ஓட்டை
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் மஞ்சள்நீர் கால்வாய் சீரமைப்புக்கு, அரசு 40 கோடி ரூபாய் வழங்கி பணிகள் நடைபெறும்போதே, கால்வாயின் கான்கிரீட் சுவரில் பல இடங்களில் ஓட்டை போட்டு, பலரும் கழிவுநீர் விடுவது, நகரவாசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற செயலை கண்டுகொள்ளாமல் விடுவது, திட்டத்தின் நோக்கத்தை கேள்விக்குறியாக்குகிறது.காஞ்சிபுரம் மாநகராட்சியில் செல்லும் கால்வாய்களில் அகலமானதும், நீளமானதுமாக மஞ்சள்நீர் கால்வாய் உள்ளது. மன்னராட்சி காலத்தில் வெட்டப்பட்ட இந்த மஞ்சள்நீர் கால்வாய், மழைநீர் வடிவதற்காக அமைக்கப்பட்டது.புத்தேரியில் துவங்கும் மஞ்சள்நீர் கால்வாய், கிருஷ்ணன் தெரு, பல்லவர்மேடு, காமராஜர் சாலை, திருக்காலிமேடு வழியாக நத்தப்பேட்டை ஏரியில் கலக்கிறது. இக்கால்வாயில் பக்கவாட்டு சுவர்கள் சேதமடைந்தும், கழிவுகளால் நிரம்பியும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மோசமான நிலையில் இருந்தது.அவற்றை சீரமைத்து, கால்வாய் மீது மூடி அமைக்க, காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. இதற்காக, தமிழக அரசு சார்பில், 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, லோக்சபா தேர்தலுக்கு முன்பாக துவக்கி வைத்தார்.கால்வாய் மீது கான்கிரீட் வாயிலாக மூடப்பட்டால், அதன் மீது வாகன போக்குவரத்து துவங்கும் எனவும், நகரின் நெரிசலை குறைக்க வாகன பார்க்கிங் திட்டம் போன்றவை கொண்டு வரப்படும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், கால்வாய் மீது கான்கிரீட் தரை அமைத்தால், கனரக வாகனங்கள் சென்று அவற்றை சேதப்படுத்தும் என, மூடி அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது. மாறாக, கால்வாயின் இருபுறமும் கான்கிரீட் சுவரும், கால்வாய்க்கு கான்கிரீட் தரை மட்டுமே அமைக்கப்படுகிறது.ஓராண்டாகவே கால்வாய் பணிகள் மந்தகதியில் நடைபெறுவதாக நகரவாசிகள் புலம்பி வரும் நிலையில், புதியதாக அமைக்கப்படும் கான்கிரீட் கால்வாயில் இப்போதே சிலர் துவாரம் அமைத்து, கழிவுநீர் கலந்து விடுவது நகரவாசிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.காஞ்சிபுரம் பல்லவரம் மேடு பகுதியில், சமீபத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கான்கிரீட் தடுப்பு சுவரில் சிலர் ஓட்டை போட்டு கழிவுநீரை திறந்து விடுவது தெரியவந்துள்ளது. கால்வாய் பணிகள் முழுமை அடையாத போதே, கான்கிரீட் சுவரில் ஓட்டை போடும் நபர்கள், எதிர்காலத்தில், இந்த சுவரை உடைத்து பெரிய அளவிலான கழிவுநீர் குழாய்கள் அமைப்பர் என்பதில் சந்தேகமில்லை. இதுபோன்ற விதிமீறல் சம்பவங்களை மாநகராட்சி பொறியியல் பிரிவினர் கண்டுகொள்ளாமல் இருப்பது, மற்ற பகுதியினரையும் ஊக்குவிக்கும். கால்வாய் செல்லும் பிற பகுதியினரும் ஓட்டை போட்டு கழிவுநீர் திறந்துவிடுவது அதிகமாகும் என, நகரவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.காஞ்சிபுரத்திற்கு, 40 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த புதிய திட்டம் செயல்பாட்டில் இருக்கும்போதே, இதுபோன்ற சம்பவங்கள், திட்டத்தை பலவீனபடுத்துவதோடு, திட்டத்தின் நோக்கமே வீணாவதாக நகரவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.பல்லவர்மேடு பகுதியில் அடுத்தடுத்து தடுப்புச்சுவரை உடைத்து, பல்வேறு இடங்களில் கழிவுநீர் செல்ல ஓட்டை போட்டுள்ளதை, நகரவாசிகள் அதிர்ச்சியோடு பார்த்து செல்கின்றனர்.
கால்வாய் இடைவெளியில் விடும் கழிவுநீர்!
காஞ்சிபுரம் ஆனந்தாபேட்டை, திருக்காலிமேடு பிரதான சாலை வழியாக செல்லும் மஞ்சள்நீர் கால்வாய் அருகே வசிப்போர், கால்வாய்க்கும், சாலைக்கும் இடையே காலியாக உள்ள இடத்தில் பள்ளம் தோண்டி, வீட்டு உபயோக கழிவுநீரை பள்ளத்தில் விடுகின்றனர். பள்ளம் முழுமையாக நிரம்பி வழியும் கழிவுநீர், மஞ்சள் நீர் கால்வாயில் கலக்கிறது. மேலும், கழிவுநீர் தேங்கியுள்ள ஆழமான பள்ளத்தில் அவ்வழியாக செல்லும் ஆடு, மாடு, நாய், பூனை உள்ளிட்ட விலங்குகள் தவறி விழுந்து, கழிவுநீரில் மூழ்கி உயிரிழக்கும் சூழல் உள்ளது. எனவே, மஞ்சள் நீர் கால்வாயின் அகலம் குறைக்கப்பட்டுள்ளதால், காலியாக உள்ள இடத்தில் பள்ளம் தோண்டி கழிவுநீர் விடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காலியாக உள்ள இடத்தில் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.