சேர்ப்பாக்கம் பச்சையம்மன் கோவிலில் காணிக்கை தலைமுடி சேகரிக்க ஏலம்
உத்திரமேரூர்:சேர்ப்பாக்கம் பச்சைஅம்மன் கோவிலில், காணிக்கை தலைமுடி சேகரிப்பதற்கான உரிமம் நேற்று ஏலம் விடப்பட்டது.உத்திரமேரூர் தாலுகா, தண்டரை ஊராட்சிக்கு உட்பட்ட, சேர்ப்பாக்கம் கிராமத்தில் பச்சைஅம்மன் சமேத மன்னார்சாமி கோவில் உள்ளது.ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, இக்கோவிலில் ஆடி, சித்திரை ஆகிய மாதங்களில் சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம்.இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேண்டுதலுக்காக தலை முடியை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், பக்தர்கள் வேண்டுதலுக்காக காணிக்கையாக செலுத்தும் தலை முடியை சேகரிக்க, ஆண்டுதோறும் ஹிந்து சமய அறநிலையத் துறையின் சார்பில், ஏலம் விடுவது வழக்கம்.அதன்படி, இந்த ஆண்டுக் கான காணிக்கை தலைமுடி சேகரிப்புக்கான ஏலம், உத்திரமேரூர் சரக அறநிலையத்துறை ஆய்வாளர் பிரீத்திகா தலைமையில் நேற்று நடந்தது.அதில், 2025 --- 26ம் ஆண்டுக்கான காணிக்கை தலைமுடி சேகரிப்பு உரிமம், 1.73 லட்சத்திற்கு ஏலம் போனது. இதில், கோவில் செயல் அலுவலர் தீன்ஷா உட்பட பலர் பங்கேற்றனர்.