காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் அரசு மருத்துவமனைகளில், மருத்துவ உபகரணங்கள் போதுமானதாக இல்லை என, நீண்ட நாட்களாகவே புகார் எழுந்த வண்ணம் உள்ளது.மாவட்ட சுகாதார பேரவை வாயிலாக, பல்வேறு மருத்துவ உபகரணங்களை கேட்டு, சுகாதாரத்துறை மேலிடத்துக்கு, உயரதிகாரிகள் அறிக்கை அளித்தனர். இதை தொடர்ந்து, மருத்துவ உபகரணங்கள் போதுமானதாக இல்லை என்பதற்கு உதாரணமாக, உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் மாஸ்க் பயன்படுத்துவதற்கு பதிலாக, டீ கப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த விவகாரம், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அடுத்தபடியாக, காஞ்சிபுரத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், காய்ச்சல் பிரிவில் உள்ள ஆண்கள்வார்டில், குளுக்கோஸ் பாட்டில் மாட்டுவதற்கு, தரை துடைக்கும் குச்சியை பயன்படுத்தி வருவது, நோயாளிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளுக்கோஸ் பாட்டில்மாட்டுவதற்கு கூட, மருத்துவ உபகரணங்கள் இல்லாதது, நோயாளிகளுடன் வந்த உறவினர்களுக்கு அதிர்ச்சியளித்து உள்ளது. காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில், ஏற்கனவே பிரசவத்துக்கு அனுமதிக்கப்படும் பெண்களுக்கு முறையாக சிகிச்சை அளிப்பதில்லை என, பல்வேறு புகார்கள் உள்ளன.இந்நிலையில், குளுக்கோஸ் பாட்டில் மாட்டுவதற்கு, தரை துடைக்கும் குச்சியை பயன்படுத்தி வருவது, சுகாதாரத் துறையின் அலட்சியத்தை காட்டுவதாக அமைந்து உள்ளது.